×

சேலம் கைதிகள் தயாரிக்கும் ராகி பிஸ்கட், முறுக்கு உற்பத்தி அதிகரிப்பு: பொதுமக்களுக்கு விற்பனை செய்ய தீவிரம்

சேலம் : ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் கைதிகள் தயாரிக்கும் ராகி பிஸ்கட், முறுக்கு போன்ற நொறுக்கு தீனிகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. சேலம் மத்திய சிறையில் 800க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 200க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் உள்ளனர். இவர்களுக்கு சிறையில் கைத்தொழில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்கள் விடுதலையாகி செல்லும்போது, அத்தொழில் மூலம் வாழ்க்கையை வளப்படுத்தி கொள்ள முடியும். சேலம் மத்திய சிறையை பொருத்தவரை, அரசு மருத்துவமனைகளுக்கான கட்டில்கள், தீத்தடுப்பு வாளி போன்றவை  தயாரிக்கப்படுகிறது. தற்போது மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளுக்கு பிரட் தயாரிக்கும் பணியும் துவக்கப்பட்டுள்ளது. ஆனால், சேலம் அரசு மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட ஆர்டர் நிறுத்தப்பட்டதால், கைதிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தொற்று பரவும் நிலையில் கைதிகளின் வேண்டுகோளுக்கிணங்க மிக்சர், காரச்சேவ் போன்றறை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது  144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டு வரும் நிலையில் பொதுமக்களுக்கு கைதிகள் தயாரிக்கும் நொறுக்கு தீனிகளை விற்பனை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி காரச்சேவ், மிக்சர், நீள முறுக்கு, டீ கேக், பன், பிரட், ராகி பிஸ்கட் போன்றவை தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரமான முறையில் 5 தண்டனை கைதிகள், இவற்றை தயாரித்து வருகின்றனர். இதனை சிறையின் வெளிப்புற பகுதியில் மனு எழுதும் இடத்தில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம்(சனி) மட்டும் ₹2ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் பொதுமக்களுக்கு கைதிகள் தயாரிக்கும் நொறுக்கு தீனி விற்பனையை துவக்கியுள்ளோம். வெளிமார்க்கெட்டை விட குறைவான விலையில் விற்பனை செய்து வருகிறோம். இதற்காக உற்பத்தியை அதிகரித்துள்ளோம்,’ என்றனர்.

Tags : prisoners ,Salem ,public ,detainees , Salem detainees,ragi biscuits, torque increases: intensity , public
× RELATED சிறைக்குள் வெள்ளம் 100 கைதிகள் தப்பி ஓட்டம்