×

பொள்ளாச்சி, நாகர்கோவிலை தொடர்ந்து மதுரையிலும் அட்டகாசம், பள்ளி, கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பேர் சிக்கினர்

* குளிர்பானத்தில் போதை பொருட்களை கலந்து சீரழித்த கொடூரம்
* போலீசார் விசாரணையில் ‘திடுக்’ தகவல்கள் அம்பலம்

மதுரை: மதுரையில் பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி சீரழித்ததோடு, மது, போதை மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து கொடுத்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சி, நாகர்கோவில் சம்பவத்தை தொடர்ந்து மதுரையிலும் இதுபோன்று நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவிக்கு ஒரு செல்போனில் இருந்து தொடர்ந்து அழைப்பு வந்தது. மேலும், அந்த எண்ணில் இருந்து ஆபாச எஸ்எம்எஸ் வந்ததையும் பார்த்து மாணவி அதிர்ச்சி அடைந்தார். அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசும்போது, எதிர்முனையில் பேசிய வாலிபர், ‘‘என்னிடம் பணம், பொருட்கள் ஏராளமாக உள்ளது. அதை உனக்கு தருகிறேன். நான் சொல்வதை கேட்க வேண்டும்’’ எனக்கூறி பாலியல் தொழிலுக்கு அழைத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி, தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஹேமமாலா தலைமையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரையை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பெரும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

போலீசார் கூறும்போது, ‘‘மதுரை தல்லாகுளம் பகுதியில் ரெஸ்டாரண்ட், டிரேடர்ஸ் மற்றும் செல்போன் கடை நடத்தி வரும் 3 வாலிபர்கள், அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் பள்ளியைச் சேர்ந்த விடுதி மாணவிகளை குறி வைத்து பிடித்துள்ளனர். இந்த கடைகளுக்கு வரும் மாணவிகளின் செல்போன் எண்களை வைத்துக்கொண்டு எஸ்.எம்.எஸ் அனுப்பியும், செல்போனிலும் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். பின்னர் அவர்களை நேரில் வரவழைத்து, பணம், பிரியாணி உட்பட அறுசுவை உணவுகளை கொடுத்து ஆடம்பரமாக செலவு செய்துள்ளனர். நன்கு பழகியதும் அவர்களை ஊர் சுற்ற அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். மேலும், குளிர்பானங்களில் போதை மாத்திரைகளை ரகசியமாக கலந்து கொடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, அதை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அதனை காட்டி தொடர்ந்து மிரட்டி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருமானம் பார்த்துள்ளனர்.

மேலும் விடுதியில் இருக்கும் மாணவிகளுக்கு உணவுப்பொருட்கள் பார்சல் கொடுப்பது போல் மதுப்பாட்டில்களை கொடுத்தும், சில மாணவிகளை மயக்கியும் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் பல இளம்பெண்களை சிக்க வைத்து, வாழ்க்கையை சீரழித்துள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இந்த 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம். இதில் யாரெல்லாம் தொடர்புள்ளனர் என்ற பட்டியலை தயாரித்து வருகிறோம். இவர்கள் கடந்த 3 வருடமாக இதே ேவலையில் ஈடுபட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’’ என்றனர்.

மாணவிகள் புகார் கொடுக்க தயக்கம்
கடந்த 3 வருடமாக செல்போன் கடைகளில் ரீசார்ஜ் செய்ய வரும் மாணவிகளின், செல்போன் எண்களை குறிவைத்து பிடித்துள்ளனர். மேலும் அவர்கள் விடுதியில் தங்கி இருப்பதால் பணம், உணவுப்பொருட்களை கொடுத்து வலை விரித்துள்ளனர். இதில் பல மாணவிகள் சிக்கியுள்ளனர். இவர்கள் தற்போது கொரோனா தொற்று காரணமாக விடுமுறையில் சென்று உள்ளனர். விடுமுறையில் இருக்கும் இவர்களை போன் செய்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது புகார்கள் கொடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர். புகார் கொடுக்கும் மாணவிகளின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

வலைத்தளங்களில் ‘வலை விரிப்பு’
பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு காம்போ ஆபர் சலுகைகள் என்று முகநூல், வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்துள்ளனர். அந்த விளம்பரங்களை பார்த்து தொடர்பு கொள்ளும் மாணவிகளின் செல்போன் எண்களை வைத்து ஆசை வார்த்தை கூறி வலையில் சிக்க வைத்துள்ளனர். இதுகுறித்து மதுரை மனநல ஆலோசகர் ராஜ சவுந்திரபாண்டியன் கூறும்போது, ‘‘தற்போது செல்போன் புழக்கம் ஆண்களை விட பெண்களிடம் தான் அதிகமாக உள்ளது. மாணவிகள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் இன்டர்நெட்டில் எப்போதும் தொடர்பில் உள்ளனர். இதனால் பல சமூக சீர்கேடுகளில் சிக்கித் தவிக்கின்றனர். இதிலிருந்து காக்க பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். தனிமையில் இருக்கும்போது அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கல்லூரிகளுக்கு செல்லும்போது செல்போன்களை கொண்டு செல்ல முழுமையாக தடை விதிக்க வேண்டும்” என்றார்.Tags : Pollachi ,Madurai ,Nagercoil ,college students ,school ,Atakasam , Madurai - Pollackachi, Nagercoil, Madurai, Atakasam, School, College Students
× RELATED பொள்ளாச்சி அருகே தனியார் கிடங்கில்...