×

கொரோனா ஊரடங்கால் விற்பனையின்றி அழுகி வரும் வெற்றிலையால் ரூ.3 கோடி வருவாய் இழப்பு: நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் நன்றாக விளைந்துள்ள வெற்றிலை விற்பனைக்கு செல்லாததால் கொடியிலேயே அழுகி வருகின்றன. இதனால் சுமார் ரூ.3 கோடி வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல், மிளகாய், பருத்தி உள்ளிட்ட தானிய வகைகள் பயிரிட்டாலும் கூட தண்ணீர் வளம் உள்ள சில பகுதிகளில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. திருப்புல்லாணி அருகே முத்துப்பேட்டை, பெரியபட்டிணம், மண்டபம் அருகே தங்கச்சிமடம், புதுமடம், ஆற்றாங்கரை உள்ளிட்ட சில பகுதிகளில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. திருமணம் உள்ளிட்ட வீட்டு சுபகாரியங்கள், கோயில் விழாக்கள், வழக்கமான கோயில் வழிபாடு போன்றவற்றில் தாம்பூலமாகவும், ஜீரண சக்திக்காக வீடு, ஓட்டல்கள், பீடா கடைகளிலும், குழந்தைகளுக்கு மருத்துவ பயன்பாடு மற்றும் விஷக்கடி போன்றவற்றிற்கும் வெற்றிலை பயன்படுத்தப்படுகிறது.

இப்பகுதியில் விளைவிக்கப்படும் வெற்றிலை கொழுந்து நிலையிலும் அடர்த்தியாகவும், பெரிய அளவில், ருசி மிகுந்ததாக இருப்பதால், இந்த வெற்றிலைக்கு ராமநாதபுரம், ராமேஸ்வரம், ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கீழக்கரை உள்ளிட்ட உள் மாவட்ட பகுதிகள் மட்டுமின்றி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட வெளிமாவட்டங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளதால், அமோகமாக விற்பனை ஆகி வந்தன. இந்நிலையில் கொரோனா தொற்று ஊரடங்கால்
 மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் வெற்றிலை வாங்கி செல்ல வரவில்லை.இதனால் வெற்றிலையை பறிக்க ஆட்கள் இல்லாததால் கொடியிலேயே அழுகியும், காய்ந்தும் வருகிறது. இதனால் வருமானமின்றி குடும்பங்கள் வறுமையில் வாடி வருகிறது. எனவே, அரசு கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும். நெல், மிளகாய் போன்ற தானிய பயிர்களுக்கு வழங்கப்படும் காப்பீடு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வெற்றிலை விவசாயிகள் கூறும்போது, ‘‘மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் வெற்றிலை சாகுபடி செய்து வருகிறோம்.

வெற்றிலையை படரவிடுவதற்கு அகத்தி கீரை மரம் வளர்ப்போம். அருகில் வெற்றிலை வளர்க்கப்பட்டு, அந்த அகத்தி மரம் மீது படரவிடுவோம். பராமரிப்பு பணிகளும் குறைவு. இதனால் அதிகமாக கூலியாட்கள் தேவைப்படாது. இதனால் செடி நடுவதிலிருந்து, பராமரித்து, பறிப்பது வரை பெரும்பாலும் வீட்டு ஆட்களை வேலை செய்து கொள்வோம். ஒருமுறை வளர்க்கப்பட்டு நல்ல மழை பெய்தால் 5 ஆண்டுகளும், சுமாராக மழை பெய்தால் 3 ஆண்டுகள் வரையிலும் பறிக்கலாம். வெற்றிலை மூலம் ஆண்டிற்கு ரூ.3 லட்சம் வரை லாபம் ஈட்டலாம். இந்தாண்டு மாவட்டத்தில் வழக்கத்தை விட நல்ல மழை பெய்தது. இதனால் தற்போது வெற்றிலை சாகுபடி அமோகமாக விளைந்துள்ளது. வியாபாரிகள், பொதுமக்களுக்கான விலையும் குறையும் நிலை இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று அபாயம், ஊரடங்கு போன்றவற்றால் வெற்றிலை விற்கப்படும் கடைகள், பயன்படுத்தப்படும் உணவு சார்ந்த கடைகள் திறக்கவில்லை.

உணவு சார்ந்த கடைகள் பார்சல் முறையில் நடப்பதால் வெற்றிலை பயன்பாடு இல்லை. திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள், கோயில் திருவிழாக்கள் நடக்கவில்லை. வழக்கமான கோயில்களும் திறக்கவில்லை. இதுபோன்ற காரணங்களால் வெற்றிலை பயன்பாடு முற்றிலும் குறைந்து விட்டது. இதனால் மாவட்டத்திலுள்ள வெற்றிலை விவசாயிகளுக்கு ரூ.3 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வெற்றிலை விவசாயிகளுக்கு இழப்பீடு, கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார்.

Tags : Loss ,corona curtains Loss , Loss , Rs 3 crore revenue, corrosion ,corona curtains, seek relief
× RELATED ஒன்றிய அரசின் 18% ஜிஎஸ்டி, 20%...