×

வண்டு, புழுக்களுடன் சாப்பிட முடியாத அளவுக்கு நாற்றத்துடன் ரேசனில் அரிசி: பொதுமக்கள் குற்றச்சாட்டு

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசி வண்டு, புழுக்களுடன் சாப்பிட முடியாத வகையில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழ்நாடு முழுதும் கொரோனா தொற்றால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரேசன் கடைகளில் அரிசி, பாமாயில் உள்ளிட்ட சில பொருட்கள் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் இயங்கும் 625 ரேசன் கடைகள் உட்பட மொத்தம் 802 ரேசன் கடைகள் உள்ளன. மொத்தம் 3லட்சத்து 89ஆயிரத்து 735 ரேசன் கார்டுகள் உள்ளன.சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் ஏப்ரல் மாதத்திற்கான பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் வழங்கப்பட்ட புழுங்கல் அரிசி பழுப்பு நிறத்தில் புழுக்களுடன் காணப்பட்டது. இதுகுறித்து புகார் எழுந்த நிலையில் தற்போது மே மாதத்திற்கான ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் வழங்கப்பட்ட புழுங்கல் அரிசியும் தரமற்றதாக உள்ளது. அனைத்து அரிசியும் பழுப்பு நிறத்துடனும், கருப்பு நிறத்திலும், கட்டியாகவும், வண்டுகள், புழுக்களுடன் காணப்படுகிறது.

அதிகப்படியான நாற்றம் உள்ளது. சமைத்து சாப்பிடும் வகையில் இல்லாத இந்த அரிசியால் எவ்வித பயனும் இல்லை. இதனால் இவைகளை கோழிகள் மற்றும் கால்நடைகளுக்கே உணவாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அரிசியை சமைத்து சாப்பிட்டால் உடல் நலக்குறைவு தான் ஏற்றபடும். ஒரு சில குடும்ப அட்டை தாரர்கள் இந்த அரிசியை வாங்க மறுத்து வருகின்றனர். சிலர் இந்த அரிசியினை மீண்டும் அறவையின் மூலம் பாலிஷ் செய்து சமைத்து சாப்பிடுகின்றனர்.
முத்துப்பட்டி அய்யாக்கண்ணு கூறியதாவது: சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் கடந்த மாதம் வழங்கப்பட்ட அரிசி மற்றும் இம்மாத தொடக்கத்தில் வழங்கப்பட்ட அரிசியை வாங்க மறுத்தோம். இனி வழங்கப்படும் அரிசி நல்ல அரிசியாக வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தொடர்ந்து பயனற்ற புழுங்கல் அரிசியையே வழங்குகின்றனர். இக்கட்டான காலக்கட்டத்தில் ரேசனில் வழங்கப்படும் அரிசி மிகவும் தரம் குறைவாக உள்ளது. எவ்வித பயனும் இல்லாத இந்த அரிசியை வழங்குவது வீண். அரசனிமுத்துப்பட்டி ரேசன் கடையில் வழங்கப்படும் புழுங்கல் அரிசியை கால்நடைகளுக்குத்தான் பயன்படுத்த முடியும் என்றார்.

Tags : raisins,beetle cannot eat,worms,public indictment
× RELATED ஏற்காடு பேருந்து விபத்து: அரசு நிவாரணம் வழங்க இபிஎஸ் கோரிக்கை!