×

நாய்களால் கடிபட்டு உயிருக்கு போராடிய நல்ல பாம்புக்கு அறுவை சிகிச்சை

கோவை: கோவை சீரபாளையம் பகுதியில் நாய்களால் கடிப்பட்டு உயிருக்கு போராடிய நல்ல பாம்பிற்கு மயக்க மருந்து கொடுத்து அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. கோவை அடுத்த சீரபாளையம் பகுதியில் உள்ள வீட்டிற்குள் சுமார் 5 அடி நீளமுள்ள நல்லபாம்பு ஒன்று கடந்த 3 நாட்களுக்கு முன்பு புகுந்தது. அதை பார்த்த வீட்டில் இருந்த வளர்ப்பு நாய்கள் பாம்பை கடித்து குதறியது. இதை பார்த்த வீட்டின் உரிமையாளர்கள் பாம்பு பிடிக்கும் நிபுணர் சுரேந்தருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த அவர், காயப்பட்ட பாம்பை மீட்டார். பின்னர், சத்தியமங்கலம் வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகனுக்கு தகவல் தெரிவித்தார். அவர், உடனடியாக பாம்பை கோவை டவுன்ஹால் பன்முக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுவர கூறினார். அங்கு டாக்டர் தமிழரசு பணியில் இருந்தார். அவரின் அனுமதியுடன் வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் நல்ல பாம்பிற்கு மயக்க ஊசியை செலுத்தி அறுவைசிகிச்சை மேற்கொண்டார்.

இது குறித்து டாக்டர் அசோகன் கூறுகையில், ‘‘பொதுவாக பாம்பு ஒரு கிலோ முதல் 1.5 கிலோ எடை இருக்கும். கடந்த பல நாட்களாக உணவு சாப்பிடாமல் இருந்ததால் நல்ல பாம்பின் உடல் எடை 250கிராம் தான் இருந்தது. நாய்கள் கடித்ததில் பாம்பின் வயிற்று பகுதியில் அதிகளவில் காயம் இருந்தது. அதன் 5 எலும்புகள் உடைந்து இருந்தது. மயக்க ஊசி மூலம் அறுவைசிகிச்சை செய்து சரிசெய்யப்பட்டது. தற்போது பாம்பு குணமடைந்த நிலையில், வனத்தில் விடுவிக்கப்பட்டது. பாம்புகளுக்கு அறுவைசிகிச்சை செய்வது சவாலான காரியம். தற்போது வரை 50க்கும் மேற்பட்ட பாம்புகளுக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது,’’ என்றார்.

Tags : Surgery , good snake, bitten, dogs ,life
× RELATED யானை தாக்கி விவசாயி பலி