×

கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் நிலை ஒருவருக்கொருவர் மாறுப்படும்: டிஸ்சார்ஜ் முறையில் மாற்றம் குறித்து மத்திய சுகாதாரத்துறை விளக்கம்

டெல்லி : மருத்துவமனையில் இருந்து குணமடைந்த கொரோனா நோயாளிகளை வீட்டுக்கு அனுப்பும் கொள்கையில் மத்திய அரசு திடீர் மாற்றம் செய்துள்ளது.  இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகி வருகிற நிலையில், அதன்பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கான வழிகாட்டுதல்களில் சுகாதார அமைச்சகம் மாற்றம் செய்துள்ளது. அதாவது கொரோனா பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தவர்களுக்கு மட்டுமே கபம் மறுபரிசோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் என்று ரிப்போர்ட் வாங்க வேண்டும், சாதாரண கொரோனாபாதிப்பு நோயாளிகளுக்கு டிஸ்சார்ஜின் போது பரிசோதனை தேவையில்லை என்று சுகாதார அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறியை வகுத்துள்ளது.

*இதுவரை கொரோனா உறுதியாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிற ஒருவரை வீட்டுக்கு அனுப்புவது என்றால் 14-வது நாளில் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும், அதில் கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தால், மீண்டும் 24 மணி நேரத்தில் மறுபரிசோதனை செய்ய வேண்டும்.
அப்போதும் கொரோனா இல்லை என்று உறுதி செய்தால் மட்டுமே பாதிப்புக்குள்ளானவர், மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்.

*மத்திய அரசின் மாற்றம் செய்யப்பட்ட கொள்கை, தீவிரத்தின் அடிப்படையில் 3 விதங்களில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களை வகைப்படுத்துகிறது. அதாவது கொரோனா நோயாளிகளை வகைப்பிரிக்கும் போது, மிகமிதமான, மிதமான, மற்றும் கடுமையான என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப அவர்களது ‘டிஸ்சார்ஜ்’ முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

* எச்.ஐ.வி. நோயாளிகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், புற்றுநோயாளிகள் உள்பட கடுமையான பாதிப்புக்குள்ளானவர்களை சிகிச்சை முடிந்து அனுப்பும்போது கொரோனா பரிசோதனை (ஆர்.டி-பி.சி.ஆர். பரிசோதனை) செய்து தொற்று இல்லை என்பதை உறுதி செய்து அனுப்ப வேண்டும்.

* மிதமான பாதிப்புக்குள்ளானவர்களை உடல் வெப்ப நிலை, ஆக்சிஜன் நுகர்வு ஆகியவற்றை கண்காணித்து, 3 நாளில் காய்ச்சல் குணமான நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு ஆக்சிஜன் ஆதரவு இல்லாமல் பராமரித்து, 10 நாட்களுக்கு பின்னர் அனுப்பிவிடலாம். அவர்களை அனுப்பும்போது மருத்துவ பரிசோதனை செய்ய தேவையில்லை. அடுத்த 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும்.

* லேசான அல்லது மிகமிதமான பாதிப்புடன் அறிகுறி இருந்தவர்களின் வெப்ப நிலையையும், நாடித்துடிப்பையும் தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும். அறிகுறி தோன்றிய 10 நாளில், 3 நாட்களுக்கு காய்ச்சல் இல்லை என்றால் அனுப்பி விடலாம். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை. அவர்கள் வீட்டில் மேலும் 7 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன் ஆக்சிஜன் நுகர்வு 95 சதவீதத்துக்கு குறைவாக இருந்தால், நோயாளி கொரோனா பராமரிப்பு மையத்துக்கு மாற்றப்படுவார்.

* அங்கிருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் மீண்டும் காய்ச்சல், இருமல், சுவாச பிரச்சினை ஏற்பட்டால் கொரோனா பராமரிப்பு மையம் அல்லது மாநில அரசின் ஹெல்ப்லைன் அல்லது எண் 1075-ஐ தொடர்பு கொள்ள வேண்டும். அவரது உடல்நிலை 14 நாட்கள் தொலை தொடர்பு சாதனம் வழியாக கண்காணிக்கப்படும். இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது.

Tags : healers ,coroner ,Central Health Department ,discharge change ,corona patients , Healing, Corona, Patients, Discharge, Guidelines, Change, Health, Ministry
× RELATED தொடர்ச்சியாக 1 லட்சத்துக்கு கீழ் சென்ற...