கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்த 18 தொழிலாளர்களுக்கு கொரோனா

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் கூலித்தொழிலாளர்கள்  18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சென்ற வியபாரிகளுக்கு அதிகளவில் கொரோனா தொற்று ஏற்பட்டதால் காய்கறி, பழம், பூ  மார்க்கெட்டை முழுவதுமாக மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர். தொடர்ந்து, கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் கூலி தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு ரத்த பரிசோதனை செய்ததில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால், அங்கு வேலை செய்யும் 535 கூலி தொழிலாளர்களுக்கு ரத்த  பரிசோதனை செய்வதற்காக கடந்த 3 நாட்களுக்கு முன், மாநகர பேருந்தில் அழைத்து சென்று, விருகம்பாக்கம், திருமங்கலம், தி.நகர் ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தி  வைத்து பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இவர்களில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மற்றவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. இதனால், அவர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டனர்.

காவல் நிலையத்துக்கு சீல்

அமைந்தகரை காவல் நிலைய எஸ்ஐ மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த ஒருவர் என 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அமைந்தகரை காவல் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட எஸ்ஐ மற்றும் ஊர்க்காவல் படை வீரருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் சக போலீசாருக்கு பரிேசாதனை செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

144 பேர் வீடு திரும்பினர்

நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு வார்டில் கொரோனா தொற்று உள்ள 290 பேர் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், இங்கிருந்த 290 பேரில் 11 பெண்கள் உள்பட 144 பேருக்கு தொற்று இல்லை என்பது பரிசோதணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை மாநகராட்சி சுகாதார பிரிவினர்   சிறப்பு பேருந்து மூலம் நேற்று அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories:

>