×

ராயபுரம் மண்டலத்தில் 8 பேருக்கு கொரோனா

தண்டையார்பேட்டை: ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட கொத்தவால்சாவடி நாட்டு பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த 55 வயது நபருக்கு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சல், சளி இருந்ததால், ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், அவரது குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்தபோது, மகன், மருமகள் உள்பட 4 பேருக்கு நோய் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களையும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுதித்துள்ளனர்.  இதேபோல், கொத்தவால்சாவடியை சேர்ந்த மாநகராட்சி சுகாதாரத்துறை ஒப்பந்த ஊழியரான 22 வயது வாலிபருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, இவரது குடும்பத்தினருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.

கொத்தவால்சாவடி அப்பாசாமி தெருவை சேர்ந்த 54 வயது பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லாததால் புரைசைவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று தெரியவந்தது. இதனால், அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கொத்தவால்சாவடி ஆச்சாரப்பன் தெருவில் வசித்து வரும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மூட்டை தூக்கும் கூலி தொழிலாளிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ராயபுரம் மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. மேற்கண்ட பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

7 குழந்தைகளுக்கு தொற்று
எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சூளைமேடு பகுதியில் 2 மாத ஆண் குழந்தைக்கும், வண்ணாரப்பேட்டை, நெற்குன்றம் பகுதிகளில் 3 வயதுள்ள 3 குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 4 வயது சிறுமி என மொத்தம் 7 குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Corona ,zone , Corona ,Raipuram zone
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...