×

அரபு நாட்டு வேலை கனவு தகர்கிறது; 60 லட்சம் பேரின் பிழைப்புக்கு ஆபத்து விடை பெறுகிறேன் எண்ணெய் தேசமே: வெறுங்கையோடு திரும்பும் வளைகுடா இந்தியர்கள்

சென்னை: வானம் பார்த்த பூமியானதால் விவசாயத்துக்கும் வழியில்லை... பருவமழை மட்டுமல்ல, வாழ்க்கையும் பொய்த்து விட்டது. இதனால் சொந்த ஊரிலேயே பிழைக்க வழியில்லாத அப்பாவி கிராமத்து மக்களுக்கு, கை கொடுத்தவை வளைகுடா நாடுகள்தான். நகைகளையும், சொற்ப நிலங்களையும் அடகு வைத்தாவது வளைகுடா நாடுகளுக்கு பறக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். அதிலும், படிக்காத கிராமத்து இளைஞர்கள் பலருக்கு இது ஒன்றே வாழ்வின் ஆதாரமாக இருந்தது. அந்த ஆணி வேரையே கச்சா எண்ணெய் விலை சரிவும், கொரோனாவும் அசைத்துப் பார்த்து விட்டன. எவ்வளவு துயரம் இருந்தாலும், வீட்டின் நிலைமையை நினைத்து வேலை பார்த்த வளைகுடா தொழிலாளர்கள், இப்படி ஒரு சூறாவளி தங்களை சிதைக்கும் என்று நினைத்திருக்கவே மாட்டார்கள்.

ஐடிஐ, இன்ஜினியரிங் படித்தவர்கள் மட்டுமின்றி, பள்ளிப்படிப்பை தாண்டாத பலரும் வளைகுடா நாடுகளில் பணிபுரிகின்றனர். வளைகுடா கூட்டுறவு கவுன்சிலில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட், சவூதி அரேபியா, கத்தார், குவைத், ஓமன் நாடுகளில் சுமார் 8 கோடி முதல் 10 கோடி இந்தியர்கள் பணி புரிகின்றனர். இவர்களில் சுமார் 60 சதவீதம், 60 லட்சம் பேர் படிப்பைக்கூட தாண்டாமல், தோட்ட வேலை, கிளீனர், கட்டிட வேலை போன்ற பணிகளில் உள்ளனர். இந்த 60 லட்சம் பேர் வேலைக்குதான் இப்போது பெரிய ஆபத்து வந்திருக்கிறது. பலர் கடந்த ஒரு மாதமாகவே கொத்துக் கொத்தாக வேலை இழந்து வருகின்றனர்.  பிரண்ட் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது. கடந்த ஜனவரி மாதத்தில் கூட பேரல் சுமார் 70 டாலராக இருந்த கச்சா எண்ணெய், மார்ச் மாதத்தில் இருந்து சரிய தொடங்கியது.

வளைகுடா நாடுகளின் வருவாய் ஆதாரம் கச்சா எண்ணெய்தான். விலை சரிவில் இருந்து மீள, உற்பத்தியை குறைத்து ஒபெக் நாடுகள் சமாளித்தன. ஆனால் சவூதி அரேபியா - ரஷ்யா இடையிலான போட்டியால் உற்பத்தியை திடீரென அதிகரித்ததால் கச்சா எண்ணெய் விலை மார்ச் மாதத்தில் இருந்தே சரியத் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 3வது வாரத்தில் கச்சா எண்ணெய் பேரல் 17 டாலருக்கும் கீழ் வந்து விட்டது.  இதை தொடர்ந்து, பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்ததால், ஏப்ரலில் இருந்தே பல நிறுவனங்கள் இந்தியர்களை வேலையில் இருந்து நீக்க தொடங்கின. அப்போதே தன்னுடன் பணியாற்றிய ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழந்தனர். இதனால் பணமின்றி, உணவின்றி கட்டுமான பணி நடக்கும் இடங்களில் தங்க வேண்டிய கொடுமை ஏற்பட்டது என, குவைத்தில் இருந்து திரும்பிய இந்தியர் ஒருவர் கூறியுள்ளார்.

ஏற்கெனவே தள்ளாட்டத்தில் இருந்த வளைகுடா நாடுகளின் பொருளாதாரம், கொரோனாவும் சேர்ந்ததால் சரிய ஆரம்பித்து விட்டது. கொரோனாவால் தற்போது இந்தியா திரும்ப சுமார் 1.5 லட்சம் இந்தியர்கள் பதிவு செய்துள்ளதாக, ஐக்கிய அரபு எமிரேட் தூதரகம் கூறுகிறது. இதில் 25 சதவீதம் பேர் வேலை இழந்தவர்கள் என கூறப்படுகிறது.  வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள், சம்பாதித்த பணத்தை தங்கள் குடும்பத்துக்கு அனுப்பி வருகின்றனர். இவ்வாறு வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பும் பணத்தில், வளைகுடா கூட்டுறவு கவுன்சில் உள்ள நாடுகளில் இருந்துதான் 50% வருகிறது என, 2016-17 நிதியாண்டின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்த 50 சதவீதத்தில் ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து 26.9%, சவூதி அரேபியா (11.6%), கத்தார் (6.5%), குவைத் (5.5%), ஓமன் (3%).

பிற நாடுகளில் இருந்து 46.5% பணத்தை இந்தியர்கள் அனுப்புகின்றனர். 2019ம் ஆண்டில் இந்தியர்கள் 8,300 கோடி டாலர் (சுமார் 6,30,800 கோடி) அனுப்பியுள்ளனர். நடப்பு 2020ம் ஆண்டில் 6,400 கோடி டாலர் (சுமார் 4,86,400 கோடி) அனுப்புவார்கள் என மதிப்பீடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 23% குறைவு.  இப்படி, வெளிநாடுகளில் இருந்து பல கோடி ரூபாய் பணத்தை அனுப்பியவர்கள், கச்சா எண்ணெய் விலை சரிவு, பொருளாதார மந்தநிலை, கொரோனாவால் இன்று வேலை இழந்து, இருண்ட எதிர்காலத்துடன், தங்களுக்கு வாழ்வளித்த எண்ணெய் தேசத்தில் இருந்து கண்ணீரோடு விடைபெறும் நிலை ஏற்பட்டு விட்டது.

இருண்ட எதிர்காலம்
ஏற்கெனவே பொருளாதார மந்த நிலையில் இந்தியா தள்ளாடி வருகிறது. கொரோனாவும் சேர்ந்து கொண்டதால் பலர் வேலை இழந்து வருகின்றனர். இந்தியாவிலேயே படித்த பல கோடி பேரின் வேலைக்கு ஆபத்து காத்திருக்கும்போது, வளைகுடா நாடுகளில் இருந்து வரும் பள்ளிப்படிப்பை தாண்டாத தொழிலாளிகளின் நிலை கேள்விக்குறிதான். அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அவர்களின் எதிர்காலம் இருண்ட காலமாகிவிடும் என்கின்றனர் தொழில்துறையினர் மற்றும் பொருளாதார நிபுணர்கள்.

விலையும் குறையல...வேலையும்நிலைக்கல
பிபிஏசி புள்ளி விவரப்படி, கடந்த 2019 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை தினமும் சராசரியாக 15.3 கோடி லிட்டர் பெட்ரோல், 26.99 கோடி லிட்டர் டீசல் விற்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மத்திய அரசுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் ₹890 கோடி வருவாய் கிடைத்துள்ளது. தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும், இதன் பலன் மக்களுக்கு கிடைக்காத அளவுக்கு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய, மாநில அரசுகள் ஏற்றி விட்டன. அதேநேரத்தில், கச்சா எண்ணெய் விலை சரிவால் வளைகுடா இந்தியர்களுக்கும் வேலை பறிபோய் வருகிறது. மொத்தத்தில் கச்சா எண்ணெய் விலை சரிவால் இந்தியர்கள் மிக அதிகமாகவே பாதிப்புக்கு ஆளாகி விட்டனர்.

Tags : country ,Gulf Indians ,Arab , Corona, curfew, Arab job, oil nation, Gulf Indians
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...