×

கொரோனா பிரச்னையெல்லாம் முடியும் வரை யாருக்கும் வரி நோட்டீஸ் அனுப்பிடாதீங்க: வரிகள் வாரியம் திடீர் உத்தரவு

புதுடெல்லி: கொரோனா பிரச்னையெல்லாம் முடிந்து இயல்பு நிலை திரும்பும் வரை, குழுவின் ஒப்புதல் இல்லாமல் யாருக்கும் வரி நோட்டீஸ் அனுப்ப வேண்டாம் என, மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது.  கொரோனாவால் பொருளாதாரம் மிகவும் மோசமாகி வருகிறது. அரசின் வரி வருவாயும் குறைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பணக்காரர்களுக்கு 40 சதவீத வரி விதிப்பு உள்ளிட்ட பரிந்துரைகளை ஐஆர்எஸ் அதிகாரிகள் அனுப்பியது பெரும் பரபரப்பையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, வருமான வரி அதிகாரிகளுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் புதிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. இதில், குழுவின் ஒப்புதல் இல்லாமல் வரி நோட்டீஸ் அனுப்பக்கூடாது என வலியுறுத்தியுள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டால், அதை தணிக்கை செய்யும் வருமான வரி அதிகாரி, வருமான வரி சட்டப்பிரிவுகளின் படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவார். இதற்காக வரி செலுத்துபவர் அளிக்கும் விளக்கம் மற்றும் ஆதாரம் திருப்திகரமாக இல்லாவிட்டால், அந்த கணக்கை மறு தணிக்கைக்கு உட்படுத்தும் அதிகாரம், வருமான வரித்துறை அதிகாரிக்கு உள்ளது.  ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இதுபோன்ற வரி விளக்கங்களை கேட்டு, ஜூன் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில் இதுபோன்ற வரி நோட்டீஸ்களை அனுப்ப வேண்டாம். கொரோனாவால் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், இதுபோன்று நோட்டீஸ் அனுப்புவது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

கொரோனாவால் வரி செலுத்துவோர் பல்வேறு அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ளனர்.  எனவே, நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், அதற்கு முன்னதாக நிர்வாக குழுவின் ஒப்புதலை கண்டிப்பாக பெற வேண்டும். கடந்த நிதியாண்டில் வருமான வரி சோதனை நடத்தி பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை மையப்படுத்தி வைக்க வேண்டும் எனவும் ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பிய பிறகு இதையெல்லாம் மேற்கொள்ளலாம் என, சுற்றறிக்கையில் மத்திய நேரடி வரிகள் வாரியம் குறிப்பிட்டுள்ளது.

Tags : Corona ,anyone ,Tax Board , Corona, Tax Board, Notices
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...