×

இந்திய கிரிக்கெட் வீரர்களை வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட அனுமதிக்கலாம்... ரெய்னா வலியுறுத்தல்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர்களை குறைந்தது இரண்டு வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாட பிசிசிஐ அனுமதிக்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா வலியுறுத்தி உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராகக் களம் காண்பவர் சுரேஷ் ரெய்னா. ஐபிஎல் தவிர மற்ற உள்ளூர் போட்டிகளில் பெரிதாக பங்களிக்காததால் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப முடியாத நிலைமையில் இருக்கிறார்.  இந்நிலையில் சமூக ஊடகம் ஒன்றில் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதானுடன் கலந்துரையாடினார். அந்த நிகழ்ச்சியில் ரெய்னா கூறியதாவது: இந்திய வீரர்களை வெளிநாடுகளில் நடைபெறும் ஐபிஎல் போன்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அனுமதிப்பதில்லை.

இந்த நிலைமை வீரர்கள் முறைப்படி ஓய்வை அறிவிக்கும் வரை தொடர்கிறது. வெளிநாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் விளையாட இந்திய வீரர்களை அனுமதிப்பதன் மூலம் அவர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள  உதவியாக இருக்கும். பொருளாதார ரீதியாகவும் இது நல்ல பயனனை தரும்.  இதுகுறித்து பிசிசிஐ, ஐசிசி-யுடன் இணைந்து வெளிநாட்டு லீக் போட்டிகளில் இந்திய வீரர்களுக்கு  வாய்ப்புகளை  ஏற்படுத்துவது குறித்து திட்டமிட வேண்டும்.  பல வெளிநாட்டு வீரர்கள் இதுபோன்ற லீக் போட்டியில் விளையாடுவதன் மூலம் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்வதுடன் மீண்டும் தேசிய அணியில் இணைவதற்கான வாய்ப்புகளை பெறுகின்றனர்.

புதிதாக அறிமுகமான 100 பந்து கிரிக்கெட் போட்டியில்  ஹர்பஜன் சிங் பெயர் இடம் பெற்றிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் அதில் இருந்து வாபஸ் பெறுவதாகவும் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் தெளிவுபடுத்தினார். யுவராஜ் சிங் இப்போது கனடா டி20 லீக் போட்டிகளில் விளையாடுகிறார். ஆனால் அவர் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிறகே அது சாத்தியமாகியது. இவ்வாறு ரெய்னா கூறினார்.

அவரது இந்த கருத்துக்களை  வரவேற்ற இர்பான், ‘இந்திய வீரர்களை வெளிநாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் பங்கேற்க அனுமதிப்பது நல்லது. தனது 29வது வயதில் தான் மைக்கேல் ஹஸ்ஸி அறிமுகமானார். ஆனால், ஒரு இந்திய வீரர் 30 வயதில் ஒருபோதும் தேசிய அணியில் இடம்பிடிக்க முடியாது. முப்பது வயதை கடந்து வீரர்கள் தேசிய அணிக்கு திரும்புவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு அவர்களை வெளிநாடுகளில் நடைபெறும் உள்ளூர் லீக் போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும்’  என்றார்.



Tags : cricketers ,Indian ,Raina , Indian cricketers, foreign league competition, Raina
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு போட்டி