×

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட மாநகராட்சி ஊழியர், 2 பெண்கள் திடீர் பலி: சென்னையில் உயிரிழப்பு 8 ஆனது

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்ட மாநகராட்சி ஊழியர் உள்பட 2 பெண்கள் திடீரென உயிரிழந்தனர்.  
திருவிக நகர் மண்டலத்துக்கு உட்பட்ட புளியந்தோப்பு தட்டாங்குளம் பகுதியை சேர்ந்த 78 வயது மூதாட்டிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 1ம் தேதி ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, கொரோனா இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக இறந்தார். இதேபோல், திருவிக நகர் மண்டலத்துக்கு உட்பட்ட ஓட்டேரி, மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 57 வயது பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 7ம் தேதி அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவரை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்து பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இல்லை என முடிவு வந்தது. இருப்பினும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் அதிலிருந்து மீண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இருவருமே உயிரிழந்த சம்பவம் திருவிக நகர் மண்டலத்தில் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவிக நகர் மண்டலத்தில் கொரோனா பாதிப்பால் ஏற்கனவே 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது மேலும் இருவர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒருவர் பலி:  கொண்டித்தோப்பு ரத்தின முதலி  தெருவை சேர்ந்த 54 வயது மாநகராட்சி ஊழியர், 5வது மண்டலம் 50வது வார்டில்  கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு கடந்த 7ம் தேதி  உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அங்கு ரத்த மாதிரியை பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று இருப்பது தெரிந்தது.

தொடர் சிகிச்சைக்கு பிறகு நோய்  அறிகுறி இல்லாததால், கடந்த 9ம் தேதி சூரப்பட்டு பகுதியில் உள்ள தனிமை  வார்டில் அனுமதிக்கப்பட்டார்.  அன்று இரவு இவருக்கு மூச்சுத் திணறல்  ஏற்பட்டதால், ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை  பலனின்றி நள்ளிரவில் இறந்தார்.  விசாரணையில், ஏற்கனவே அதே வார்டில் பணிபுரிந்த  மாநகராட்சி ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதும், அவர் மூலம் இவருக்கும்,  மற்றோரு ஊழியருக்கும் நோய் தொற்று ஏற்பட்டது தெரியவந்தது.

Tags : Coroner ,women ,Corona ,crash ,Corona Municipal Employees ,Women Outbreak ,Chennai , Corona, Corporation employee, 2 women, Madras
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ