×

மாலத்தீவில் இருந்து 187 தமிழர்கள் உட்பட 698 இந்தியர்களுடன் கப்பல் கொச்சி வந்தது

திருவனந்தபுரம்: மாலத்தீவில் இருந்து 187 தமிழர்கள் உட்பட 698 இந்தியர்களுடன் புறப்பட்ட இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் ஜலாஷ்வா நேற்று காலை 9.15 மணியளவில் ெகாச்சி வந்தடைந்தது. ெகாரோனா பீதியால் பல்வேறு நாடுகளில்  சிக்கியுள்ள இந்தியர்களை ‘வந்தே பாரத்’ என்ற திட்டத்தின்கீழ் விமானங்கள்  மூலமும், ‘ஆபரேஷன் சமுத்ர சேது’ என்ற திட்டத்தின்கீழ் கப்பல்கள் மூலமும்  மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.  இந்த நிலையில்  மாலத்தீவில் சிக்கியுள்ள 19 கர்ப்பிணிகள், 14 குழந்தைகள் உள்பட 698 பேரை  அழைத்து வர இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் ஜலாஷ்வா உள்பட 2 கப்பல்கள்  புறப்பட்டு சென்றன. நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மாலத்தீவில் இருந்து  பரிசோதனைக்கு பின்னர் அவர்கள் அனைவரும் கப்பலில் ஏற்றப்பட்டனர். இந்த  கப்பலில் 440 மலையாளிகள், தமிழ்நாட்டை சேர்ந்த 187 பேர் மற்றும் கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, ஹரியான உட்பட 17 மாநிலங்களை சேர்ந்தவர்கள் இருந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்ட  கப்பல் நேற்று காலை 9.15 மணியளவில் கொச்சி துறைமுகத்தை அடைந்தது. பின்னர் கப்பலில் வந்த  அனைவரையும் 50 பேர் கொண்ட குழுக்களாக பிரித்து மருத்துவ பரிசோதனை  நடத்தப்பட்டது. இதில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் பரிசோதனைக்கு பின்னர் வீடுகளுக்கு  அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்களில் நோய் அறிகுறி இல்லாதவர்கள் அரசு  முகாம்களுக்கு 14 நாட்கள் தனிமையில் இருக்க அனுப்பி வைக்கப்பட்டனர்.  நோய் அறிகுறி காணப்பட்ட ஒருவர் கொச்சி மருத்துவ கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் கப்பலில் வந்த தமிழ்நாட்டை சேர்ந்த 187 பேரும் தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 7 பஸ்களில் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் கொச்சி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 14 நாட்களுக்கு பின்னரே அவர்கள் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.


Tags : Tamils ,Maldives ,Indians , Maldives, 187 Tamils, 698 Indians, Ship, Kochi
× RELATED தங்கதமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு: பல...