×

பெட்டிக்கடை, லாண்டரி, ஜெராக்ஸ், சாலையோர தள்ளுவண்டி உள்பட 34 வகை கடைகளை இன்று முதல் திறக்கலாம்

*  சலூன், பியூட்டி பார்லருக்கு மட்டும் அனுமதி இல்லை

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் மேலும் 34 வகையான கடைகள் திறக்க அனுமதி அளித்து அரசு அறிவித்துள்ளது. இந்த கடைகளில் வாடிக்கையாளர்களிடம் தனி நபர் இடைவெளியினை பின்பற்ற அறிவுறுத்துவதோடு, கிருமிநாசினிகள் பயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்கள், எஸ்பிக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து அனைத்து கடைகள், தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து கடந்த மே 4ம் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தி தனிக்கடைகள், தொழிற்சாலைகள், கட்டுமான பணி, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 9ம் தேதி இரண்டாவது கட்டமாக நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் உள்ள தனிக்கடைகள், பெட்ரோல் பங்க்குகள் இன்று முதல் திறந்திருக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டீக்கடைகள் திறப்பதற்கும், தனியார் நிறுவனம் 33 சதவீதம் ஊழியர்களுடன் செயல்படலாம் என்றும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, காய்கறி, மளிகை கடைகள் இன்று முதல் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம். பிற தனிக்கடைகள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரையும், தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை மளிகை கடைகள் செயல்படலாம்.

சென்னை மாநகராட்சி உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் டீக்கடைகள் பார்சல் சேவைக்கு மட்டும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. சென்னை மாநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையும், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 24 மணி நேரமும் செயல்படலாம். சென்னை மாநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரையும், மற்ற அனைத்து பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படலாம்.இந்த கடைகள் மற்றும் அலுவலகங்களில் தனிநபர் இடைவெளி முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்குமாறு மாவட்ட கலெக்டர்கள், எஸ்பிக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் தனிக்கடைகள் இன்று முதல் திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்த நிலையில் என்னென்ன கடைகள் திறக்கலாம் என்பது குறித்து குழப்பம் நீடித்து வந்தது. தற்போது, தமிழக அரசு 34 வகையான கடைகளை திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
 இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) பல செயல்பாடுகள், பணிகள், இன்று முதல் குறிப்பிட்ட நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்படுவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் பிற தனிக்கடைகள் பிரிவில் 34 வகை கடைகளை திறக்கலாம். ஊரடங்கு தளர்வின் போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகள், கடைகள் தொடர்ந்து இயங்கும். மேலும் கொரோனா நோய்த் தொற்று தன்மையைப் பொறுத்து வருங்காலங்களில் பல்வேறு பணிகளுக்கு, கடைகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்படும்.

இந்த கடைகளின் உரிமையாளர்கள், குளிர்சாதன வசதி இருந்தால் அதை இயக்காமல், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனி நபர் இடைவெளியினை பின்பற்ற அறிவுறுத்துவதோடு, கிருமிநாசினிகள் பயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். மேலும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மாநகராட்சி ஆணையாளர்களும், காவல் துறையினர், அரசால் அறிவுறுத்தப்பட்ட இந்த கடைகள், நிறுவனங்களில், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யவும், தனிநபர் இடைவெளியை பின்பற்றப்படுவதையும், போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்தி பணிபுரிவதையும், பணியாளர் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதையும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை தீவிரமாக கடைபிடிப்பதையும், கண்காணிக்க வேண்டும்.கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : stores ,Xerox ,Petty Shop ,stalls ,pet store , Box, Laundry, Xerox, Trolley
× RELATED 3 நாட்கள் விடுமுறை எதிரொலி; டாஸ்மாக்...