×

ஊரடங்கு முடிய ஒரு வாரமே உள்ள நிலையில் முதல்வர்களுடன் இன்று பிரதமர் ஆலோசனை

* பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கிவிடுவது பற்றி காணொலி மூலம் கருத்துக் கேட்கிறார்

புதுடெல்லி: நாடு முழுவதும் இன்னும் ஒரு வாரத்தில் 3ம் கட்ட ஊரடங்கு முடிய உள்ள நிலையில் இன்று மதியம் 3 மணிக்கு அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இதில், மே 17ம் தேதிக்கு பிறகு ஊரடங்கில் என்னென்ன தளர்வுகளை செய்யலாம் என்பது குறித்தும், பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கிவிடுவது குறித்தும் காணொலி காட்சி மூலம் பிரதமர் கருத்து கேட்டறிய உள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதலில் 21 நாட்கள், பின்னர் 19 நாட்கள், அடுத்தது 14 நாட்கள் என 3 கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 3ம் கட்ட ஊரடங்கு வரும் 17ம் தேதியுடன் முடிய உள்ளது.

ஒவ்வொரு முறையும் ஊரடங்கு முடிவதற்கு முன்பாக, அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்துக்களை கேட்டறிகிறார்.  அந்தவகையில், 3ம் கட்ட ஊரடங்கு முடிய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவது இது 5வது முறையாகும்.
காணொலி காட்சி மூலம் நடக்கும் இந்த சந்திப்பு மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இதில் பிரதமர் மோடியுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் மற்றும் பிரதமர் அலுவலகம் மற்றும் சுகாதார அமைச்சக உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த ஆலோசனையில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என கூறப்படுகிறது. 3ம் கட்ட ஊரடங்கிலேயே பொருளாதார நடவடிக்கைகளை தொடங்க பல தளர்வுகள் வழங்கப்பட்டன. ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் தொழில் நிறுவனங்கள்
செயல்பட கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் முக்கிய வருவாய் ஆதாரமான மதுக்கடைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மே 17ம் தேதிக்குப் பிறகு மேலும் சில தளர்வுகளை நீட்டிப்பது தொடர்பாக இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

அதே போல, கொரோனா பாதிப்பு நிலவரங்களையும் பிரதமர் மோடி கேட்டறிவார். நோய் பாதிப்பின் தீவிரத்தை அடிப்படையாக கொண்டு அனைத்து மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என 3 வகையாக மத்திய அரசு பிரித்துள்ளது. இதில் சில ஆரஞ்சு, பச்சை மண்டல பகுதிகளில் வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளதால், அவற்றை வகைப்படுத்துவதில் மாற்றம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. கடைசியாக கடந்த ஏப்ரல் 27ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியபோது, நாடு முழுவதும் வைரஸ் பாதிப்போர் எண்ணிக்கை 28,000 ஆக இருந்தது. இது தற்போது 63 ஆயிரத்தை நெருங்கியிருக்கிறது.

எனவே, மே 17ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை முழுமையாக நீக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. அதே சமயம், பொருளாதாரத்தை மீட்க படிப்படியாக தளர்வுகள் வழங்க உள்ளது. இதில் எந்தெந்த தளர்வுகள் வழங்கலாம், சிவப்பு மண்டல பகுதிகளில் நோய் பரவலை தடுக்க செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதித்து, பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

Tags : consultation ,chiefs , Curfew, Chief Ministers, Prime Minister Modi, Corona
× RELATED வேதகிரீஸ்வரர் சித்திரை திருவிழா...