திருப்பூரில் இருந்து 1,140 வட மாநிலத்தவர்களுடன் பாட்னாவுக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது: மற்ற மாநிலங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தகவல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 1,140 வட மாநில தொழிலாளர்களுடன் பீகார் தலைநகர் பாட்னாவுக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது. சிறப்பு ரயிலில் அமராவதியில் உள்ள சைனிக் பள்ளியில் படிக்கும் 46 மாணவர்களுடன் செல்கின்றனர். இதனையடுத்து வரும் நாட்களில் ஒடிசா, உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு சிறப்பு ரயிகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் வடமாநிலத் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப பயணச்சீட்டு வழங்குவதாக தகவல் பரவியதால், திருப்பூர் ரயில் நிலையத்தில் நேற்று ஏராளமான தொழிலாளர்கள் திரண்டனர். எனினும், இது வதந்தி என்றும், பயணச்சீட்டு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெறவில்லை என்றும் அதிகாரிகள் மற்றும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஏமாற்றமடைந்த தொழிலாளர்கள், தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, மற்ற மாவட்டங்களில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்கள், அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் காலதாமதம் செய்கிறது என்றனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவர்களை சமாதானப்படுத்தினர்.

இதனையடுத்து இன்று திருப்பூரில் பீகார் தலைநகர் பாட்னாவுக்கு சிறப்பு ரயில் மூலம் தொழிலாளர்கள் அனுப்பப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் அறிவித்த நிலையில் பதிவு செய்த நபர்கள் அரசுப் பேருந்து மூலம் ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ரயில் நிலையத்தில் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு உணவு, தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டு தற்போது 1,140 வட மாநிலத்தவர்களுடன் திருப்பூரில் இருந்து சிறப்பு ரயில் புறப்பட்டது.

Related Stories:

>