விஜய் சேதுபதி பற்றி தரம் தாழ்ந்து பதிவிடுகிறார்கள்..நற்பெயரைக் குலைக்கிறார்கள்: ரசிகர் மன்றம் சார்பில் சைபர் கிரைமில் புகார்

சென்னை  : சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு விஜய் சேதுபதி தலைமை ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பாக தலைமை செயலாளர் குமரன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.விஜய் சேதுபதி ரசிகர் மன்ற செயலாளர் ஜே.குமரேசன் என்பவர் இதுபற்றி அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: விஜய்சேதுபதி ஒரு வருடத்துக்கு முன் 17.03.2019 அன்று சன் டிவியில் நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது கிரேசி மோகன் சொன்ன நகைச்சுவைத் துணுக்கை அதில் மறுபதிவு செய்தார். அப்படி எதார்த்தமாக சொன்னதை அந்த தன்மையில் இருந்து , இந்துக்களுக்கு எதிராக விஜய் சேதுபதி சொன்னதாக மாற்றி அந்த காணொளியை எடிட் செய்து குறிப்பிட்ட சிலர் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து விஜய்சேதுபதியை எதிர்த்தும் ஆதரித்தும் வலைத்தளத்தில் பெரும் சர்ச்சை நிகழ்கிறது.  இந்த சர்ச்சையில் தர்மத்தை பாதுகாக்கும் காவலர்களை போல வாதிடுபவர்கள், தார்மீக தர்ம முறைகளை மீறி, விஜய் சேதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றி தரக்குறைவாகவும் தரம் தாழ்ந்தும் பதிவிடுகிறார்கள். விஜய் சேதுபதியின் பெயரை குலைப்பதோடு தேவையில்லாத வாக்குவாதங்கள், நல்லிணக்கத்தையும் அமைதியையும் சீர்குலைக்கும் தூண்டுகோலாக உருவாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

அறிவுசார் சமூகத்தில் வாழும் நாம் தனிமனித கருத்துகள் வேறுபட்டிருந்தாலும் ஏற்புடையதாக இல்லாமல் இருந்தாலும் தனிமனித மரியாதையை பாதிக்கும் விதமாக இருக்கக் கூடாது. கருத்துச் சுதந்திரம் என்பது காழ்ப்புணர்ச்சியாகவும் காயப்படுத்தும் விதமாகவும் இருக்கக்கூடாது. அதனால் உடனடியாக விஜய்சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றிய தரக்குறைவான அருவெறுக்கத்தக்க வகையில் உள்ள பதிவுகளை அகற்றவும் இத்தகையை பதிவுகள் வராமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படிபட்ட அவதூறுகளுக்கு காரணமாக அமைந்த அந்த சர்ச்சைக்குரிய காணொலியையும் நீக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories:

More
>