×

கொரோனா தடையால் வியாபாரிகள் வரவில்லை குடோன்களில் தேங்கி கிடக்கும் தேங்காய்: அய்யம்பாளையம் விவசாயிகள் கவலை

பட்டிவீரன்பட்டி:  கொரோனா பாதிப்பால் கொள்முதல் செய்ய வியாபாரிகள் வரவில்லை. இதனால் அய்யம்பாளையம் பகுதியில் தேங்காய்கள் டன் கணக்கில் குடோன்களில் தேங்கி கிடக்கின்றன. பட்டிவீரன்பட்டி, தேவரப்பன்பட்டி, சேவுகம்பட்டி, அய்யம்பாளையம், மருதாநதி அணை பகுதி, சித்தரேவு, சித்ததையன்கோட்டை, எம்.வாடிப்பட்டி, சிங்காரக்கோட்டை, ஒட்டுப்பட்டி, சாலைபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகின்றது. அய்யம்பாளையத்தில் தென்னை விவசாயிகளிடமிருந்து தேங்காய்கள் மொத்தமாக வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகின்றது. கொள்முதல் செய்யப்பட்ட தேங்காய்களை மொத்த வியாபாரிகள் குடோன்களில் குவித்து வைத்து  மும்பை போன்ற வெளிமாநிலங்களுக்கும், தேங்காய் மார்க்கெட் உள்ள காங்கேயம் பகுதிகளுக்கும் அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் அய்யம்பாளையம் பகுதியில் கொரோனா பாதிப்பின் காரணமாக வியாபாரிகள் வராததால் தேங்காய்கள் குடோன்களில் தேக்கமடைந்து வருகின்றன. மேலும் தற்போது அக்னி வெயில் ஆரம்பித்துள்ளதால் குடோன்களில் அதிக நாட்கள் தேங்காய்களை வைக்க முடியாது. இதனால் கிடைத்த விலைக்கு கொள்முதல் செய்த தேங்காய்களை விற்பனை செய்து வருகிறார்கள்.

தென்னந்தோப்புகளில் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க பயன்படும் தேங்காய்மட்டை, தென்னங்கீற்று போன்றவை வீணாகி வருகின்றன.மேலும் தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் தென்னை சார்ந்த பொருட்களிலிருந்து தயாராகும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களான தென்னம்பாலை செய்தல், கிடுகு பின்னுதல், தென்னை மட்டைகளிலிருந்து கயிறு தயாரித்தல் போன்ற பல்வேறு பணிகளும் ஸ்தம்பித்துள்ளன. இதனால் இந்த தொழில்களை நம்பியுள்ள ஏராளமான தொழிலாளர்கள் ெகாரோனா பாதிப்பால் வேலையிழந்து உள்ளனர். விவசாயிகள் கூறுகையில், தென்னந்தோப்புகளிலிருந்து தேங்காய்கள் அதிகளவில் வரத்து வர துவங்கியுள்ளது. வரத்து அதிகரித்துள்ள நிலையில் விலை சரிந்து வருகின்றது. இதனால் தென்னந்தோப்புகளிலும், மொத்த கொள்முதல் செய்யும் குடோன்களிலும் தேங்காய்கள் விற்பனை இன்றி குவித்து வைக்கப்பட்டுள்ளன. சென்ற வாரம் உயர்வில் இருந்த தேங்காய் விலை தற்போது குறைந்து வருகின்றது.

காங்கேயத்தில் கொப்பரை உலர்களம் மற்றும் தேங்காய் எண்ெணய் மில்கள் அதிகமாக உள்ளதால் காங்கேயம் மார்க்கெட்டில் நிர்ணயிக்கப்படும் விலையின் அடிப்படையில் தேங்காய் விலை நிர்ணயிக்கப்படுகின்றது. உயர்ந்து வந்த தேங்காய் விலை தற்போது குறைந்து வருகின்றது.  காங்கேயம் மார்க்கெட்டில் சில வாரங்களுக்கு முன்பு மரத்திலிருந்து உரித்த தேங்காய் டன் ஒன்றிற்கு 36 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போது டன் ஒன்றிற்கு ரூ.10 ஆயிரம் வரை விலை குறைந்து டன் 26 ஆயிரம் ரூபாயாக உள்ளது. மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. தென்னை விவசாயிகள் பாதிப்பதை தடுக்க அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இப்பகுதியில் தமிழக அரசு கொப்பரைத் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்றனர்.

Tags : Merchants ,Corona , Merchants ,coming , Corona ban
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...