×

விலை போகாத வெள்ளரிக்காய்: விரக்தியில் சிவகங்கை விவசாயிகள்

சிவகங்கை: கெரோனா ஊரடங்கால் வெள்ளரிக்காய்கள் விலை போகாததால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், சிங்கம்புணரி, காளையார்கோவில், மானாமதுரை, சிவகங்கை உட்பட மிகக்குறைவான இடங்களில் மட்டுமே காய்கறிகள் பயிரிடப்படுகிறது. கீரை வகைகள், கத்திரி, கொத்தவரங்காய், வெண்டை, தக்காளி, மிளகாய் உள்ளிட்டவைகளே அதிகபட்சமாக இங்கு விளைவிக்கப்படுகிறது. மானாவாரி பயிர்கள், கோடைகால பயிர்களையும் அவ்வப்போது விவசாயிகள் பயிர் செய்வர். தொடர்ந்து கடந்த ஐந்து மாதங்களாக போதிய மழை இல்லாததால் காய்கறி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடும் வெயில் சுட்டெரிப்பதால் நோய் தாக்குதல், விளைச்சல் குறைவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கிணற்றுப்பாசனத்தை நம்பி விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்து வருகின்றனர். சிவகங்கை அருகே இடையமேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறைந்த நீரில் அதிக லாபம் தரும் வெள்ளரி கோடை காலத்தில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. அக்னி வெயிலில் மருத்துவ குணம் கொண்ட வெள்ளரி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து 40 நாட்கள் பராமரித்தால் 3 மாதம் தொடர்ந்து நாள்தோறும் விளைச்சல் தரும். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் வெள்ளரிக்காய்களை சந்தை படுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இதனால் வேறு வழியில்லாமல் வியாபாரிகள் நிர்ணயிக்கும் விலைக்கு விற்கும் நிலை எற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயி பூச்சி கூறியதாவது: வெள்ளரி பயிர்களை ஆண்டுதோறும பயிரிட்டு வருகிறோம். ஆனால் இந்த ஆண்டு பெரும் சோதணைகளை சந்தித்து வருகிறோம். இரவில் முயல்களும், பகலில் மைனாக்களும் பயிர்களை சேதப்படுத்துகிறது. அதிலிருந்தெல்லாம் பாதுகாத்து விளைந்த வெள்ளரிக்கு விலை கிடைக்கவில்லை. கொரோனாவால் வெள்ளரியை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. வியாபாரிகள் வந்து மொத்தமாக வாங்கி சென்றாலும் அவர்களே விலை நிர்ணயிக்கின்றனர். ஒரு காய் ஒரு ரூபாய்க்கு மட்டுமே விலை போவதால் நஷ்டம் ஏற்படுகிறது’ என்றார்.

Tags : Sivaganga , Cucumber, Sivaganga, Farmers
× RELATED சிவகங்கை தொகுதி வேட்பாளரின் பிரச்சார ஜீப் பறிமுதல்!