×

தலையில் உரசும் மின்கம்பிகள்: உயிர் பயத்தில் கிராம மக்கள்

காரைக்குடி: காரைக்குடி அருகே பில்லங்குடி பகுதிக்குச் செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக தலையில் உரசும் வகையில் செல்வதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். காரைக்குடி அருகே பெரியகோட்டை ஊராட்சி பகுதியில் 5000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவ் ஊராட்சிக்கு உட்பட்ட பில்லங்குடி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கு சாக்கவயல் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சப்ளை செய்யப்படுகிறது. மணக்குடியில் 110 கேவி டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு அங்கிருந்து மணக்குடி, வெள்ளிபட்டி, பில்லங்குடி என மூன்று கிராமங்களுக்கு மின்சப்ளை செய்யப்படுகிறது.

வெள்ளிப்பட்டியில் இருந்து பில்லங்குடிக்கு தனியார் தோட்டம் வழியாக மின்கம்பிகள் கொண்டுவரப்படுகிறது. முறையாக மின்கம்பங்கள் அமைக்காமல் 3 இடங்களில் மட்டும் மின்கம்பங்கள் உள்ளதால் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் இப்பகுதி வழியாக யாரும் நடந்து சென்றால் கூட தலையில் தட்டும் வகையில் உள்ளது. தவிர காற்று அடித்தால் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி மின்தடை ஏற்படுவதோடு, குறைந்த மின்னழுத்தமும் அடிக்கடி ஏற்படுகிறது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஊராட்சி வார்டு உறுப்பினர் செந்தில்குமார் கூறுகையில், ‘பில்லங்குடி பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 10க்கும் மேற்பட்ட விவசாய போர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இக்கிராமத்துக்கு மின்சப்ளைக்கு என அமைக்கப்பட்டுள்ள மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. காற்று அடிக்கும்போது மின்தடை ஏற்பட்டுவிடும். இதனை சரிசெய்ய நிரந்தர லைன்மேன் இல்லாததால் மின்சார விநியோம் ஒருநாளுக்கு மேல் தடைபடும். தவிர குறைந்த மின்னழுத்த பிரச்னை நிரந்தரமாக உள்ளதால் அனைத்து மின் உபகரணங்களும் பழுதாவது வாடிக்கையாக உள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கூறியும் பயனற்ற நிலையே உள்ளது. அதேபோல் மூன்று கிராமங்களுக்கு ஒரே ஒரு டிரான்ஸ்பார்மர் அமைத்துள்ளனர். எங்கள் பகுதிக்கு என தனியாக டிரான்ஸ்பார்மர் வேண்டும் என கோரிக்கை விடும் பல வருடங்கள் ஆகியும் கண்டுகொள்ளாத நிலை உள்ளது. இதேநிலை நீடித்தால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும்’ என்றார்.

Tags : Village people , Batteries, villagers
× RELATED திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு...