×

விற்பனைக்கு அனுப்ப முடியாமல் தோட்டத்திலேயே வீணாகும் முட்டைகோஸ்

ஓசூர்: ஓசூர் அருகே முட்டைகோஸ் மற்றும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், ஊரடங்கால் வாகன போக்குவரத்து இல்லாததால் விற்பனைக்கு அனுப்ப முடியாமல், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஓசூர் பகுதியில் குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவுவதால் தக்காளி, முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகள் விளைவிக்கப்பட்டு, கொல்கத்தா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில், ஊரடங்கின் காரணமாக கடந்த 40 நாட்களுக்கு மேலாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், விவசாயிகள் காய்கறிகளை விற்க வழியின்றி குப்பைகளில் கொட்டி வருகின்றனர்.

இதுகுறித்து ஓசூர் அருகேயுள்ள திப்பேபள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி சேஷாத்ரி கூறுகையில், ‘15 ஏக்கரில் முட்டைகோஸ் மற்றும் தக்காளி சாகுபடி செய்துள்ளேன். இதற்காக ₹20 லட்சத்திற்கும் மேல் செலவு செய்துள்ளேன். கடந்த ஆண்டு இதே மாதம் ஒரு மூட்டை முட்டைகோஸ் ₹1,000க்கு விலை போனது. தற்போது வாகன போக்குவரத்து இல்லாததால், கொல்கத்தாவுக்கு முட்டைகோஸ் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, தக்காளி கிரேடு ₹1,000க்கு மேல் விற்பனையாகும் நிலையில், அவற்றை அறுவடை செய்து விற்பனை செய்ய முடியவில்லை. இதனால், அவை செடியிலேயே பழுத்து வீணாகி வருகிறது. இதனால் எங்களுக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது,’ என்றார்.


Tags : garden , For sale, cabbage
× RELATED தாவரவியல் பூங்கா புல் மைதானங்களில் புதிய மண் கொட்டும் பணி மும்முரம்