×

ஆம்பூர் அருகே பூத்துக்குலுங்கும் கோழி கொண்டை பூக்கள்: விற்பனை செய்ய இயலாமல் விவசாயிகள் தவிப்பு

ஆம்பூர்: ஆம்பூர் அருகே பல ஏக்கரில் பயிரிடப்பட்டு தற்போது பூத்து குலுங்கும் கோழி கொண்டை பூக்கள் வாங்குவோர் இல்லாததால் செடியிலேயே வீணாகி வருகிறது. ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் கோழி கொண்டை பூக்கள் பயிரிடப்பட்டு உள்ளன. வளமான வண்டல் மண்ணும், நீர்ப்பாசன வசதியும் உள்ள விவசாய நிலங்களில் இது பயிரிடப்படுகிறது. சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்தாலும் நல்ல மகசூலையும், விற்பதால் போதிய வருமானத்தையும் தந்து வந்த இந்த கோழிக்கொண்டை பூ விளைச்சல் தற்போது கொரோனா காரணமாக போதிய விலை இன்றி செடிகளிலேயே விவசாயிகளால் விடப்படுகிறது.

இதுகுறித்து ஆம்பூர் அடுத்த பைரபள்ளியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், கோழி கொண்டை மலர்கள் சாகுபடிசெய்ய ஆகும் செலவு மிகவும் குறைவு. மேலும் எனது குடும்பத்தினர் உதவியுடன் செடியில் இருந்து பூக்களைப் பறித்துத் அன்றாடம்  பூக்கடைக்களுக்கு அனுப்பி விடுவேன். விதைத்த  40வது நாளில் பூக்கும் நிலையை அடைந்து விவசாயிக்கு போதிய வருமானம் தரும் பயிராக இந்த பயிர் விளங்குகிறது. சுமார் இரண்டு மாதம் வரை கோழி கொண்டை பூக்கள் பலன் தரக்கூடியது. ஒவ்வொரு வாரமும் குறைந்த பட்சம் 20 கிலோவும், அதிகபட்சம் 60 கிலோ வரையும் பூக்கள் கிடைக்கும்.

இதனால், குறைந்தபட்சமாக ₹600 முதல் அதிகட்சமாக ₹2 ஆயிரம் வரை நாள் ஒன்றுக்கு வருமானம் கிடைத்து வந்தது. ஆனால், தற்போது ஊரடங்கு காரணமாக பல்வேறு ஊர்களில் இருந்து வந்து வாங்கி செல்லும் பூ வியாபாரிகள் வராததால் கடந்த  40 நாட்களுக்கு மேலாக பூக்கள்  பூத்து  தோட்டத்திலேயே காய்ந்து கருகி வருகின்றன. ஒரு குடும்பத்துக்குத் தேவையான வருவாயை உடனடியாக பெற உகந்ததாக கருதியே இது நாள் வரை கோழிக்கொண்டை பூக்களை பயிரிட்டு வந்ததோம்.

குறிப்பாக  ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை பண்டிகைகள் மற்றும் திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் நடக்கும் காலம் என்பதால் அதை நம்பியே கோழிக்கொண்டை பூக்களை பயிரிட்டு வந்தோம். நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஊத்தரவால் கோழிக்கொண்டை பூக்கள் உட்பட பல்வேறு பூக்களை பயிரிட்ட  விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். எனவே, இந்தக்  பூக்கள் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்கினால் நன்றாக இருக்கும் என ஆம்பூர் தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Poothukkulam ,Ambur: Farmers' Poor Ambur , Ambur, Poultry Flowers
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 15 ஆயிரம் ஏக்கரில் கோடை நெல்சாகுபடி