×

சேலத்தில் முடங்கிப்போன பிரதான அடையாளம்; ஊரடங்கால் ஓசை இழந்த வெள்ளி கொலுசு உற்பத்தி: 5 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரமின்றி தவிப்பு

* வெள்ளி இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா.
* சேலம் வெள்ளி கொலுசு கருக்காது என்பதால் அதிக கிராக்கி.
* கொலுசு உற்பத்தியில் 22 நிலைகள், 14 வகை பட்டறைகள்.
*ரூ250 கோடி மதிப்பிலான  100 டன்,வெள்ளிப்பொருட்கள் தேக்கம்.

சேலம்: கொரோனா வைரஸ் ஊரடங்கால் சேலத்தின் பிரதான அடையாளமான வெள்ளி கொலுசு உற்பத்தி தொழில் முடங்கிக்கிடக்கிறது. இதனால் 5லட்சம் தொழிலாளர்கள்,  வாழ்வாதாரமின்றி தவிக்கும் நிலை உருவாகி உள்ளது.
அடிப்படையில் இந்தியா வெள்ளியை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் உள்ளது. சீனா, லண்டன், ஆஸ்திரேலியா, துபாய் போன்ற நாடுகளில் இருந்து வெள்ளி இறக்குமதி செய்கிறது. இதில் 50 சதவீதம் சீனாவின் வெள்ளியாக உள்ளது.தமிழகத்தை  பொறுத்தவரை வெள்ளியின் புகுந்த வீடு என்ற பெருமை சேலத்திற்கு உள்ளது. விவசாயம், நெசவு போன்ற தொழில்கள் வழக்கம் போல் இருந்தாலும், வெள்ளித் தொழில், சேலத்தின் பிரதான அடையாளமாக உள்ளது.

இங்குள்ள பட்டறைகளில் வெள்ளி கொலுசு, மெட்டி, அரைஞாண்கொடி போன்றவற்றை பிரத்யேகமான முறையில் கலைநயத்துடன் தொழிலாளர்கள் வடிவமைத்து கொடுக்கின்றனர். ஒரு வெள்ளி கொலுசு தயாராக 2 அல்லது 3 நாட்களாகும். வெள்ளி கொலுசில் செம்பு, பித்தளை ஆகியவை சேதாரம் என்ற பெயரில் சேர்க்கப்படுகிறது. சேலம் மாநகரில் கைகளால் உற்பத்தி செய்யப்படும் வெள்ளி கொலுசுகள் 58 கிராம் முதல் 65 கிராம் வரை எடை கொண்டது. நேர்த்தியான வடிவமைப்பும், கலை நயமிக்க வேலைபாடுகளும் நிறைந்த இந்த கொலுசுகள் 3 ஆண்டுகள் நீடித்து உழைக்கும் என்பது தனிச்சிறப்பு.

இதனால் தமிழகம் மட்டுமன்றி, பிற மாநிலங்களில் இருந்தும் வெள்ளி கட்டியை கொடுத்து, அதற்கு மாற்றாக கொலுசு, மெட்டி, அரைஞாண் கொடியை  வாங்கிச் செல்கின்றனர். கொலுசு உற்பத்தி என்பது 22 நிலைகளை கொண்டது. கம்பி மெஷின்,உருக்குக்கடை, மெஷின் பாலீஷ், கை மெருகுகடை,பூ மெஷின்,பொத்துகுண்டு வளையம் ெமஷின்,கரும்பு மெஷின்,குஷ்பு பட்டறை, எஸ் செயின்,சாவித்ரி சலங்கை, பட்டைமெஷின், குப்பாமெஷின், கெட்டி பூ மெஷின்,பொடி மெஷின்,லூஸ் பட்டறை,கண்ணி மாட்டும் மெஷின் என்று இந்த 22 நிலைகளை கடக்க வேண்டும். இதற்கு பிறகே கொலுசு முழு வடிவம் பெறும். இந்த 22 நிலைகளை கடப்பதற்கு 14 வகையான பட்டறைகள் உள்ளன.

இந்த பட்டறைகளில் உள்ளூர் தொழிலாளிகள், வெளிமாநில தொழிலாளர்கள் என 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்படி பட்டறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தினமும் ₹300 முதல் ₹350 வரை கூலி கிடைக்கிறது.  இந்நிலையில் கொரோனா வைரஸ் பீதியால் கடந்த மார்ச் 25ம் தேதி முதல்,ஆயிரக்கணக்கான பட்டறைகள் மூடப்பட்டுள்ளன. இந்த பட்டறைகள் இதுநாள் வரை திறக்கப்படவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சேலத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் 50 டன் அளவுக்கு வெள்ளி கொலுசு மற்றும் வெள்ளியிலான ஆபரண பொருட்கள் வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தது.

தற்போது, கடந்த இரண்டு மாதமாக தொழில் முடங்கியுள்ளது. இதனால் நேரடியாகவும்,மறைமுகமாகவும் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இவர்கள் போதிய வருமானம் இல்லாமல் வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். ஊரடங்கு எப்போது ஓயும்?அப்படி ஓய்ந்தாலும் இயல்பு நிலை எப்போது திரும்பும்? என்று காத்திருக்கின்றனர். இப்படி ஒரு சூழல் உருவாகி கொலுசு ஓசை உரக்க கேட்டால் மட்டுமே தங்களின் வாழ்வாதாரத்திற்கு வழிபிறக்கும் என்பது இவர்களின் நம்பிக்கை.

₹250 கோடி மதிப்பில் பொருட்கள் தேக்கம் - உற்பத்தியாளர் தகவல்
வெள்ளி பொருட்கள் உற்பத்தியாளர் சுரேஷ்பாபு கூறுகையில், ‘‘சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளி கால் கொலுசு, மெட்டி, அரைஞாண் கொடி ஆகியவை 70 சதவீதம் டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, கொல்கல்கத்தா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கிறது. மீதமுள்ள 30 சதவீதம்தான் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு செல்கிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 45 நாட்களுக்கும் மேலாக ரயில், பஸ்கள் இயங்கவில்லை. இதன் காரணமாக  சேலத்தில் மட்டும் ₹250 கோடி மதிப்பிலான  100 டன்,வெள்ளிப்பொருட்கள் தேக்கமடைந்துள்ளது,’’ என்றார்.

அரசு நிவாரணம் வழங்க வேண்டும் - சங்கநிர்வாகி கோரிக்கை
வெள்ளி கைவினையாளர்கள் சங்க செயலாளர் அய்யாக்கண்ணு கூறுகையில், ‘‘ஊரடங்கு காரணமாக சேலத்தில் அனைத்து பட்டறைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் வெள்ளி தொழில் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளது.ஊரடங்கு முடிந்து பட்டறைகள் திறந்தாலும், உடனடியாக உற்பத்தி இருக்காது. முதலில் மக்கள் பள்ளி கட்டணம் செலுத்தவும்,அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் மட்டுமே ஆர்வம் காட்டுவார்கள்.அதனால் இன்னும் ஆறு மாதத்திற்கு வெள்ளி வியாபாரம் மந்தமாகத்தான் இருக்கும். இதனால் வேலை இல்லாமல் பலர்,மாற்று தொழில்களை நாடிச் செல்லும் அவலம் ஏற்படும். எனவே வெள்ளி தொழிலாளர்களின் வாழ்வாரத்தை காக்க, அரசு நிவாரணத்தொகை வழங்க வேண்டும்,’’ என்றார்.

பண்டிகை நாட்களிலும் ஏமாற்றிய வியாபாரம் -பட்டறை உரிமையாளர் ஆதங்கம்
கெட்டி பூ மெஷின் பட்டறை உரிமையாளர் பாலகணேசா குப்தா கூறுகையில், ‘‘ஊரடங்கு முடிந்து வெள்ளிக்கடைகள் திறந்தாலும் உடனடியாக விற்பனை இருக்காது. ஏற்கனவே இருப்பில் உள்ள வெள்ளிப்பொருட்கள் விற்பனை நடந்தால்தான்,அடுத்து ஆர்டர்கள் கொடுப்பார்கள். அதனால் அடுத்த வியாபாரம் என்பது தீபாவளிக்கு தான் இருக்கும். வெள்ளிப்பொருட்களை விற்பனைக்கு அனுப்பும்போது 2 அல்லது 3 மாதத்திற்கு பிறகே, அதற்குரிய  தொகை கிடைக்கும். தற்ேபாது வெள்ளி வியாபாரிகள் பலருக்கு கோடிக்கணக்கில் பணம் வராமல் உள்ளன.

இது கையில் கிடைப்பதற்கு குறைந்தபட்சம் ஆறு மாத காலமாகும். ஏற்கனவே யுகாதி பண்டிகை வியாபாரம் போய்விட்டது. எதிர்வரும் நாட்களில் ராம்ஜான் பண்டிகை, முகூர்த்த வியாபாரமும் இருக்காது. இந்த வகையில் மட்டும்  கடந்த 2 மாதத்தில் வியாபாரிகளுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது,’’ என்றார்.

ஒருவேளை மட்டுமே உணவுக்கு வாய்ப்பு - தொழிலாளர் அமைப்பு வேதனை
சேலத்தில் வெள்ளி பட்டறைகளில் வேலை செய்யும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இதனால் தினமும் ஒரு வேளை உணவு மட்டுமே உண்டு வருகின்றனர். இதே நிலை இன்னும் நீடித்தால் தொழிலாளிகள் கடும் சிரமத்திற்குள்ளவார்கள். எனவே லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் வெள்ளிப்பட்டறைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொழிலாளர் நல அமைப்புகளின் கோரிக்கை.

Tags : bush ,Salem , Salem, Curfew, Silver Colus, Workers
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை