×

‘கண்ணீர் கடலில்’ பரிதவிக்கும் மீனவர்கள்; பல்லாயிரம் கோடி மீன் வர்த்தகம் ‘அவுட்’

* ஊரடங்கு, மீன்பிடி தடை என அடுத்தடுத்து அடி
* வாழ்வாதாரம் தொலைத்த 3 லட்சம் குடும்பங்கள்
* தடை முடிந்தாலும், இறால் ஏற்றுமதிக்கு சிக்கல்

கொரோனா ஊரடங்கு மற்றும் மீன்பிடி தடைக்காலம் அமல் காரணமாக தமிழக விசைப்படகு மீனவர்கள் ஒன்றரை மாதமாகவே கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் உள்ளனர். தடைக்காலம் முடிந்தாலும் இறால் ஏற்றுமதி இருக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால், தமிழகத்தில் மட்டும் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மீன் வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

ராமேஸ்வரம்: கொரோனா ஊரடங்கு தடையால் தமிழக கடலில் மார்ச் 24 முதல் ஏப்ரல் 14 வரை 20 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்ைல. இதனால் வருவாய் இல்லாமல் மீனவர்கள், குடும்பச் செலவுகளுக்குக் கூட திண்டாட வேண்டிய நிலையில் இருந்தனர். இதற்கிடையே, ஏப்ரல் 14 நள்ளிரவு முதல் 60 நாள் மீன்பிடி தடைக்காலமும் துவங்கியதால், தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழக கடலில் மீன் பிடிப்பில் ஈடுபட்டு வந்த 7 ஆயிரத்திற்கும் மேலான விசைப்படகுகள் கரை நிறுத்தப்பட்டுள்ளன.

வாழ்வாதாரம் பாதிப்பு...
இதனால் மீனவர்கள், மீன்தொழில் சார்ந்த கூலித் தொழிலாளர்கள் என 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பிழைப்பு இல்லாமல் அன்றாட வருவாய் இழந்துள்ளனர். வழக்கமாக தமிழக கடலில் மீன்பிடி தடைக்காலம் துவங்கிய பின், பிழைப்புக்காக மீனவர்கள் கேரளா, குஜராத் போன்ற அடுத்த கடலோர மாநிலங்களுக்கு மீன்பிடித் தொழில் சார்ந்த கூலி வேலைக்கு செல்வார்கள். தற்போது நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் வேறு மாநிலங்களுக்கு செல்வதற்கும் வாய்ப்பு இல்லாத நிலையில், சொந்த ஊர்களிலும் மாற்றுத்தொழில் இல்லாமல் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

3 லட்சம் பேர் பாதிப்பு
படகில் செல்லும் மீனவர்கள், மீன்பிடி சார்பு தொழிலாளர்கள் என விசைப்படகு மீன்பிடித்தொழிலை மட்டுமே நம்பி வாழும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் குடும்பங்களின் அன்றாட வருவாய் மற்றும் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. தடைக்காலத்தில் மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 ஆயிரம் அரசு தடைகால நிவாரணமாக வழங்குகிறது. தற்போது கொரோனா ஊரடங்களினால் ஒட்டுமொத்த தொழிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்றுத்தொழிலும் இல்லாமல், வருவாயும் இல்லாமல் தவிக்கும் மீனவர்களின் குடும்பத்திற்கு அரசால் வழங்கப்படும் நிவாரணம் என்பது மிகவும் குறைவே. இதனால் நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென தமிழக மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இறால் ஏற்றுமதிக்கு சிக்கல்
தமிழக கடலில் தற்போது அமலில் உள்ள 60 நாள் மீன்பிடி தடைக்காலம் முடிந்தாலும், வெளிநாடுகளுக்கு இறால் மீன் ஏற்றுமதி துவங்கினால் மட்டுமே, விசைப்படகு மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல முடியும் என்று கூறப்படுகிறது. விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் மீனவர்கள் வருவாய் இழந்துள்ளதுடன், இறால் மீன் ஏற்றுமதி மூலம் மத்திய அரசுக்கு கிடைத்து வந்த பல ஆயிரம் கோடி அந்நிய செலாவணியும் தற்போது நின்று விட்டது. உள்நாட்டு மீன் வர்த்தகத்திலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீன்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

தற்போது நாட்டுப்படகுகள் வழக்கம் போல் கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்தாலும், இவற்றின் மூலம் பிடித்து வரப்படும் மீன், வழக்கமான தேவையை சமாளிக்கும் அளவில் இல்லை. உள்ளூர் மார்க்கெட் விற்பனைக்கே பற்றாக்குறையாக உள்ளது. ஜூன் 15ம் தேதி மீன்பிடி தடைகாலம் முடிந்து மீண்டும் விசைப்படகுகள் கடலுக்கு சென்றால் மட்டுமே, இந்த பிரச்னை சீராகும். ஆனால், தடை முடிந்தாலும் விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லுமா என்ற சந்தேகம் படகு உரிமையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மீன்பிடியில் 40 ஆயிரம் படகுகள்...
ஆயிரத்து 76 கிமீ நீளம் கொண்ட தமிழக கடலோரத்தில் 13 மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழக கடல் பகுதியில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இதன் மூலம் பல ஆயிரம் கோடி உள்நாட்டு மீன் வர்த்தகம் நடைபெறுகிறது. ஆண்டுக்கு சுமார் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான 1.30 மெட்ரிக் டன் கடல் பொருள் ஏற்றுமதியும் நடைபெறுகிறது. தமிழகத்திலிருந்து இறால்மீன், கடல் நண்டு, கனவாய் மீன், சீலா, சுறா, வாவல் போன்ற விலையுயர்ந்த உயர் ரக மீன்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மீன் பிடிப்பில் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. அதே நேரம், கடல் உணவுப்பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்து வரும் நாடுகள், கொரோனா தொற்றை காரணம் காட்டி மீன் இறக்குமதிக்கு தடை விதிக்கும் அபாயமும் தற்போது நிலவுகிறது. அப்படி இறக்குமதி தடை விதிக்கப்பட்டால், உள்நாட்டு மீன் வர்த்தகம் மட்டுமே நடைபெறும். அப்படிப்பட்ட சூழலில், தமிழகம் உட்பட இந்தியா முழுவதும், வெளிநாட்டு மீன் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் பல லட்சம் கோடி ரூபாய் வருவாய் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.

‘ஜூன் 1 முதல் அனுமதி வேண்டும்’
தங்கச்சிமடம் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதி சேசு ராஜா கூறுகையில், ‘‘60 நாள் மீன்பிடி தடைக்காலம் துவங்குவதற்கு முன்பு மார்ச் 24 முதல் கொரோனா ஊரடங்கினால் 20 நாட்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனை கணக்கில் கொண்டு மீன்பிடி தடை முடியும் காலத்தை 15 நாட்களுக்கு முன்னதாக மே 31ம் தேதியுடன் முடித்து ஜூன் 1 முதல் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். மேலும், இறால் மீன் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதால் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் மீன்கள் இருப்பு உள்ள நிலையில் மீண்டும் ஏற்றுமதி எப்போது துவங்கும் என்று தெரியவில்லை. மீன்பிடி தடை முடிந்தாலும் ஏற்றுமதி நடைபெறாவிட்டால் கடலில் இறால் மீன்பிடிப்பில் ஈடுபட முடியாது’’ என்கிறார்.

உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும்
ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதி என்.ஜே.போஸ் கூறுகையில், ‘‘சாதாரண நாட்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் சிண்டிகேட் அமைத்து இறால் விலையை நிர்ணயம் செய்து விலைக்கு வாங்குவது வழக்கம். ஏற்றுமதி துவங்காதபட்சத்தில், தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு சென்றாலும் பிடித்து வரப்படும் இறால் மீன்கள் மிகவும் குறைந்த விலைக்குத்தான் வியாபாரிகளால் வாங்கப்படும். இதனால் படகு உரிமையாளர்களுக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்படும். ஏற்றுமதி இல்லையென்றால் இறால் மீன்பிடிப்பில் மீனவர்களுக்கு ஆர்வம் இருக்காது. டீசல் விலையும் உயர்ந்துள்ளதால் மீன்பிடித் தொழிலில் மீனவர்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்’’ என்கிறார்.

பல ஆயிரம் கோடி பொருட்கள் தேக்கம்
கொரோனா ஊரடங்கு தடையினால் நாடு முழுவதிலும் கடலோர மாநிலங்களில் உள்ள கடல் உணவுப் பொருள் ஏற்றுமதி நிறுவனங்களில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படாமல் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய கடல் மீன் உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. சரக்கு கப்பல் போக்குவரத்து, உலக நாடுகளில் கடல் உணவு பொருள் இறக்குமதி இரண்டும் மீண்டும் துவங்கினால்தான் இருப்பிலுள்ள பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும்.

‘உள்ளூர் சந்தையில் வருவாய் கிடைக்காது’
ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதி எமரிட் கூறுகையில், ‘‘மீன்பிடித்தொழில் செய்யாததால் வருவாய் இழந்து மிகவும் கஷ்டத்தில் உள்ளோம். அரசால் வழங்கப்படும் தடைக்கால நிவாரண நிதியை இரட்டிப்பாக்கி வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை முடிந்தாலும் இறால் ஏற்றுமதி நிலவரத்தை பொருத்தே இறால் மீன்பிடிப்பில் ஈடுபடமுடியும். இல்லையென்றால் உள்ளூர் சந்தையில் மட்டுமே விற்பனை செய்ய முடியும், இதில் போதிய அளவிற்கு வருவாய் கிடைக்காது’’ என்றார்.

மீன்கள் விலை ‘கிடுகிடு’
மீன்பிடி தடையால் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாத நிலையில், தமிழகம் முழுவதும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இயந்திரம் பொருத்திய, பொருத்தாத நாட்டுப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றன. இவர்களால் பிடித்து வரப்படும் மீன்கள் உள்ளூர் மக்களின் மீன் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இதனால் கடலோர பகுதியிலுள்ள நகரங்களில் உள்ளூர் மார்க்கெட்களில் விற்பனை செய்யப்படும் மீன்களின் விலை அதிகரித்துள்ளது. பெரிய நகரங்களில் சாதாரண நாட்களை விட பலமடங்கு மீன்களின் விலை அதிகரித்துள்ளது.

Tags : Tens of millions ,sea ,Tens ,Fishermen , Fisheries, Fish Trade, Out
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...