×

தோட்டத்துக்குள் புகுந்தபோது துரத்தியடித்த வனத்துறையினர் ஜீப்பை விரட்டி தாக்கிய யானை: வன ஊழியர் 4 பேர் உயிர் தப்பினர்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானையை விரட்ட முயன்ற வனத்துறையினரின் ஜீப்பை யானை விரட்டிச் சென்று தாக்கியது. இதில் வாகனம் சேதமடைந்தது. வன ஊழியர்கள் 4 பேர் உயிர் தப்பினர். பொள்ளாச்சி வனச்சரகத்திற்குட்பட்ட போத்தமடை, சேத்துமடை, ஆழியார்,  ஆயிரங்கால்குன்று, பச்ச தண்ணீர் பள்ளம் உள்ளிட்ட இடங்களில் யானை நடமாட்டம் கடந்த சில மாதமாக அதிகரித்தது. இதில் நேற்று முன்தினம் நள்ளிரவில், அடர் வனத்திலிருந்து பச்ச தண்ணீர் எனும் பகுதிக்கு, ஒற்றை ஆண் யானை ஒன்று இடம்பெயர்ந்து வந்தது. அந்த யானை அங்குள்ள ஒரு தனியார் தோட்டத்தில் புகுந்து, தென்னை, வாழை உள்ளிட்டவைகளை நாசமாக்கியது.

விடிய விடிய அந்த தோட்டத்திலேயே உலா வந்தது.
இதையடுத்து அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனச்சரகர் காசிலிங்கம் உத்தரவின்பேரில், வனக்காப்பாளர் ஆனந்தராஜ், வனவர், முருகன் உள்ளிட்ட வன ஊழியர்கள் விரைந்து, நேற்று அதிகாலை முதல் அந்த யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். யானை காட்டிற்குள் செல்லாததால், அவர்கள் வந்த ஜீப்பில் சென்று யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த யானை வனத்துறை வாகனத்தை நோக்கி வந்தது.
இதையறிந்து, வனத்துறையினர் பின்னோக்கி வாகனத்தை இயக்கி சென்றனர். ஆனால், அந்த யானை விரைந்து வந்து வனத்துறை ஜீப் மீது மோதி தள்ளியதுடன், தந்தத்தால் ஒரு பகுதி கண்ணாடியை குத்தி சேதப்படுத்தியது.

மேலும், ஜீப் முன் பகுதியை சேதப்படுத்தி தள்ளியது. இதனால் வாகனத்தில் இருந்த வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து திக்குமுக்காடினர். சிறிது நேரத்தில், சுதாரித்து கொண்ட டிரைவர் யோகேஸ்வரன், வனக்காப்பாளர் ஆனந்தராஜ் உள்பட 4 பேர் ஜீப்பில் இருந்து இறங்கி தப்பியோடினர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு உண்டானது. சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு, தோட்ட பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை யானையை அப்பகுதியினர் உதவியுடன், பட்டாசு வெடித்தும், தீப்பந்தம் காட்டியும் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டினர். அடர் வனத்திலிருந்து யானை உள்ளிட்ட விலங்குகள் இடம்பெயர்ந்து வருவதை தடுக்க தொடர்ந்து கண்காணிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : forest workers ,Four Forest Workers ,Forest Jeep , Wildlife, jeep, hitting elephant
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்...