×

சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் புலி, சிறுத்தை, கரடிகளை பராமரிக்க இடம் தேர்வு: முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஆய்வு

சேலம்: சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் குரும்பப்பட்டி சிறு வன உயிரின பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவை ₹8 கோடி செலவில் நடுத்தர வன உயிரின பூங்காவாக தரம் உயர்த்துவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கான நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. இதனால், பூங்காவை விரிவுபடுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. பூங்காவை ஒட்டியுள்ள காப்புக்காட்டை இணைத்து, கூடுதல் விலங்குகளை கொண்டு வந்து பராமரிக்க ஏற்பாடுகள் நடக்கிறது.

குரும்பப்பட்டி பூங்கா விரிவாக்கம் மற்றும் ஊண் விலங்குகளை பராமரிப்பது தொடர்பான, கள ஆய்வு பணியை தமிழக அரசின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக்காப்பாளர் யுவராஜ் நேற்று நடத்தினார். பூங்காவின் வனப்பரப்பு அதிகப்படுத்தும் இடமான காப்புகாட்டை பார்வையிட்டார். தொடர்ந்து, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட விலங்குகளை வைத்து பராமரிக்கும் கூடாரங்கள் அமைத்தல் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசித்து, இக்கூடாரங்கள் அமைய தகுந்த இடங்களை தேர்வு செய்தனர்.

ஏற்கனவே உள்ள வன உயிரின கூடாரங்களை மேம்படுத்துதல், வன உயிரின மருந்தகம் அமைத்தல், பொருள் விளக்க மையம், பண்டக அறை அமைத்தல், புதிய நடைபாதைகள் ஏற்படுத்துதல் போன்ற மேம்பாட்டு பணிகளை தொடங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தற்போது பூங்காவில் கடமான், புள்ளிமான், முதலை, குரங்குகள், பலவகையான பறவைகள் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நடுத்தர வன உயிரின பூங்காவாக தரம் உயர்த்தப்படும்போது, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட விலங்கினங்கள் கொண்டு வரப்பட்டு, பார்வையாளர்களை கவரும் வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இதன்மூலம் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் யுவராஜ் கூறினார். இந்த ஆய்வின் போது, சேலம் மண்டல வனப்பாதுகாவலர் பெரியசாமி, மாவட்ட வன அலுவலர் (பொ) காஞ்சனா, குரும்பப்பட்டி பூங்கா உதவி இயக்குநர் குமார், வனச்சரகர் முரளிதரன் ஆகியோர் உடனிருந்தனர்.


Tags : chief chief forest guard ,Salem Kurumbapatti Zoo ,Salem Kurumbapatti Zoo: Principal Chief Forest Conservation Survey ,Tigers , Salem, Kurumbapatti Zoo, Principal Chief Forest Officer, Inspection
× RELATED இ-சைக்கிள் அறிமுகம்