×

சேரன்மகாதேவி பகுதியில் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த கைத்தறி நெசவாளர்கள்: நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

வீரவநல்லூர்: ஊரடங்கு உத்தரவால் சேரன்மகாதேவி தாலுகாவில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கைத்தறி நெசவாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு வலியுறுத்தப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகாவிற்குட்பட்ட புதுக்குடி, கிளாக்குளம், வீரவநல்லூர், தெற்கு வீரவநல்லூர் மற்றும் வெள்ளாங்குளி ஆகிய பகுதிகளில் 3 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் குடும்பத்தினர் உள்ளனர். இவர்கள், பம்பர் காட்டன் மற்றும் செடிபுட்டா ரகம் என்ற பெயர் கொண்ட சேலைகளை மட்டுமே தயாரித்து வருகின்றனர். மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதியில் இருந்து மூலப்பொருட்களை வாங்கி சேலைகள் தயாரித்து மீண்டும் அவர்களிடமே இப்பகுதி நெசவாளர்கள் விற்பனை செய்கின்றனர். இங்கு தயாரிக்கப்படும் இவ்வகையான சேலைகளுக்கு மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் நல்ல வரவேற்பு உண்டு.

தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆயிரக்கணக்கான தொழில்களும், பல கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. அந்த வகையில் சேரன்மகாதேவி பகுதி கைத்தறி நெசவு தொழிலும் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது. போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளதால் மூலப்பொருட்கள் கிடைக்காமலும், உற்பத்தி செய்யப்பட்ட சேலைகளை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமலும் நெசவாளர்கள் பரிதவித்து வருகின்றனர்.
சேரன்மகாதேவி தாலுகாவில் மட்டும் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான சேலைகள் தேக்கமடைந்துள்ளன.

இதனால் நெசவாளர்கள் தங்களது அடிப்படை தேவைகளுக்கு கூட பணம் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் மூலம் வழங்கப்படும் பென்சன் தொகையும் கடந்த 8 மாதங்களாக இவர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே இவர்களுக்கு நலவாரியம் மூலம் கிடைக்க வேண்டிய உதவித்தொகை போக, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சுயஉதவி குழுக்கள் மூலம் வட்டியில்லா கடனும், நிவாரணமும் வழங்க வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Handloom weavers ,area ,Cheranamagadevi , Cheranmagadevi, curfew and handloom weavers
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி