×

பல மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லை; நடுரோட்டில் படுத்து முதிய தம்பதி மறியல்: ஆண்டிபட்டி அருகே பரபரப்பு

ஆண்டிபட்டி: குடிநீர் விநியோகம் கேட்டு வயதான தம்பதி சாலையில் படுத்து மறியல் போராட்டம் நடத்தியதால் ஆண்டிபட்டி அருகே பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள கொத்தப்பட்டி ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு, குன்னூர் வைகை ஆற்றில் இருந்து  பாலக்கோம்பை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்து வந்தனர். குழாய் உடைப்பாலும், வறட்சியாலும் பல மாதங்களாக கொத்தப்பட்டிக்கு சீரான குடிநீர் விநியோகம் இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தக் கிராமத்தை சுப்புராஜ் (77), அவரது மனைவி கிருஷ்ணம்மாள் (68) ஆகியோர், சீரான குடிநீர் விநியோகம் கோரி, நேற்று முன்தினம் ஆண்டிபட்டி - வேலப்பர்கோவில் சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், சீரான குடிநீர் விநியோகத்திற்கு உத்திரவாதம் அளித்தும், அவர்கள் எழுந்து செல்லவில்லை. சுமார் ஒரு மணிநேரம் சாலையிலேயே படுத்துக் கிடந்தனர். இதனால், அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் நான்கு சக்கர வாகனங்களும், இரு சக்கர வாகனங்களும் ஸ்தம்பித்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து ராஜதானி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, விரைவில் சீரான குடிநீர் விநியோகத்துக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வயதான தம்பதியரை சமாதானம் செய்தனர். இதையடுத்து கணவன், மனைவி இருவரும் எழுந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Antipatti ,road , Drinking water, elderly couple, pickle, antipatti
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?