கொரோனா நோய்க்கு எதிராக 3 மருந்துகள் அடங்கிய புதிய ஆன்டிவைரல் மருந்து கலவை கண்டுபிடிப்பு : 127 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் வெற்றி

ஹாங்காங் : கொரோனா நோயுக்கு எதிராக 3 மருந்துகள் அடங்கிய புதிய ஆன்டிவைரல் மருந்து கலவையை ஹாங்காங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.இவ்வாறான சூழ்நிலையில், கொரோனாவுக்கு ஒவ்வொருவரும் ஒரு வழிமுறையை கூறி வருகின்றனர்.

இந்நிலையில், ஹாங்காங்கில் உள்ள ஆறு பொது மருத்துவமனைகளில் நோய் பாதிக்கப்பட்ட 127 பெரியவர்களுக்கு புதிய ஆன்டிவைரல் மருந்து கலவை கொடுத்து சோதனை நடத்தப்பட்டது.மூன்று மருந்துகளின் கலவை 7 நாட்களுக்கு அவர்களுக்கு வழங்கப்பட்டது. சிகிச்சை தொடங்கிய ஏழு நாட்களுக்குள் நாசித் துவாரத்தில் வைரஸ் தொற்று இல்லை என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.இன்டர்ஃபெரான் பீட்டா -1 பி மற்றும் லோபினாவிர்-ரிடோனாவிர் மற்றும் ரிபாவிரின் ஆகிய மருந்துகளின் கலவையை உள்ளடக்கிய இந்த மருந்து சிறந்த பலனை கொடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இது லேசான மற்றும் மிதமான நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே சிறந்தது.

லோபினாவிர்-ரிடோனவீருடன் மட்டும் ஒப்பிடும்போது, அறிகுறிகளைக் காட்டிய ஏழு நாட்களுக்குள் மூன்று முறை மருந்து கொடுத்து சிகிச்சையளிக்கப்பட்டவர்களில் மருத்துவ முன்னேற்றம் காணப்பட்டது. இதனால் மருத்துவமனையில் தங்கியிருக்கும் காலம் கணிசமாகக் குறையலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.மோசமான நோயாளிகளில் இந்த மூன்று கலவையின் செயல்திறனை ஆராய பெரிய கட்ட 3 சோதனைகள் அவசியம் என்பதை ஆராய்ச்சியாளர்கள்  வலியுறுத்தி உள்ளனர்.இன்ஃப்ளூயன்ஸா குறித்த முந்தைய ஆய்வுகளின் அடிப்படையில், பல வைரஸ் தடுப்பு மருந்துகளின் கலவையுடன் சிகிச்சையளிப்பது ஒற்றை மருந்து சிகிச்சையை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த சிகிச்சை முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு அறிக்கை தி லான்செட் இதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

Related Stories:

>