×

அமெரிக்காவில் எச்1பி விசா மூலம்இந்திய டாக்டர்கள், நர்ஸ்களுக்கு வாய்ப்பு? 40,000 கிரீன் கார்டுகள் வழங்க செனட் எம்பிக்கள் பரிந்துரை

வாஷிங்டன்: அமெரிக்காவில் 40 ஆயிரம் கிரீன் கார்டுகளை, கொரோனா தொற்று காலத்தில் பணியாற்ற வெளிநாட்டு டாக்டர்கள், நர்ஸ்களுக்கு வழங்க அமெரிக்க எம்பி.க்கள் பரிந்துரைத்துள்ளனர். கொரோனா வைரசால் உலகளவில் அமெரிக்கா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 12,84,000 பேர் வைரஸ் தொற்றால் பாதித்துள்ளனர். இதுவரை சுமார் 78 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, எச்1பி உள்ளிட்ட அனைத்து வகை விசாக்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க கோரி குடியரசுக் கட்சி எம்பிக்கள் அதிபர் டிரம்புக்கு கடந்த வியாழக்கிழமை கடிதம் எழுதி இருந்தனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ள 40 ஆயிரம் கிரீன் கார்டுகளை, வெளிநாட்டு டாக்டர்கள், நர்ஸ்களுக்கு வழங்க அமெரிக்க எம்பிக்கள் பரிந்துரைத்துள்ளனர். கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் அதிலும் குறிப்பாக புறநகர் பகுதிகளில் பணியாற்றுவதற்கு சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த கிரீன் கார்டுகளில் 25 ஆயிரம் நர்ஸ்கள், 15 ஆயிரம் டாக்டர்களுக்கு வழங்கினால், ஏற்கனவே கொரோனா பணியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்க டாக்டர்களுக்கு உதவியாக இருக்கும் என்று அவர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர். இதனால் எச்1பி மற்றும் ஜெ2 விசாவில் இருக்கும் இந்திய மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நிரந்தரமாக அமெரிக்காவில் குடியேறும் வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தோல்வி அடைந்தார் டிரம்ப்
ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தல் போட்டியில் களமிறங்க உள்ளவரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடென் கூறுகையில், ``கொரோனா தொற்றை கையாள்வதில் அதிபர் டிரம்ப் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டார். அவரது பொருளாதார நடவடிக்கைகள் முழுவதும் நாட்டை பாதுகாப்பதை விட்டு, கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் பெரும் செல்வந்தர்களை பாதுகாப்பதிலேயே உள்ளது. இது டிரம்பின் பேரழிவு பொருளாதாரம் ஆகும். கடந்த மாதம் மட்டும் 2.02 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். இதனால் வேலைவாய்பின்மை சதவீதம் 14.7 ஆக உள்ளது. 1930ம் ஆண்டின் பெரும் மந்தநிலைக்கு பிறகு இதுவே மிக அதிகளவிலான வேலையின்மை சதவீதமாகும்’’ என்று கூறினார்.

₹3.60 லட்சம் நிதியுதவி வழங்க கோரிக்கை
அமெரிக்க அதிபர் தேர்தல் முன்னாள் போட்டியாளர்கள் பெர்னி சாண்டர்ஸ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், செனட் உறுப்பினர் எட் மார்கி உள்ளிட்ட ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மாதாந்திர பொருளாதார நெருக்கடி ஆதரவு மசோதாவை அறிமுகப்படுத்தி உள்ளனர். அதில் 9,00,000க்கு குறைவாக ஊதியம் பெறும் நபர்களைக் கொண்ட குடும்பத்தில் நபர் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு 1,80,000 வழங்கவும் இத்தொகை கடந்த மார்ச் மாதம் முதல் அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இதன்படி திருமணமான தம்பதியருக்கு 3,60,000 உதவித் தொகையும் ஒரு குழந்தைக்கு 90,000 வீதம் மூன்று குழந்தைகள் வரை உள்ளவர்களுக்கும் கடந்த மார்ச் மாதம் முதல் உதவித் தொகை அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : doctors ,nurses ,MPs ,Indian ,H1B ,US ,Senate , US, H1B Visa, Indian Doctors, Nurses, Green Cards
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...