ஆயத்த ஆடை உற்பத்திக்கு அனுமதி வழங்கப்படுமா? ஈரோட்டில் 200 கோடி ஏற்றுமதி ஆர்டர் பறிபோகும் அபாயம்

ஈரோடு:  ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் ஊரடங்கு  காலத்திற்கு முன்பு எடுத்த ₹200 கோடி அளவு ஏற்றுமதி ஆர்டர்கள் ரத்தாகும்  நிலை ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.   ஈரோடு  மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, சென்னிமலை, சத்தி உள்ளிட்ட பகுதிகளில்  ஏராளமான ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஈரோட்டில் மட்டும் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இதில் 30  நிறுவனங்கள் ஏற்றுமதி ரகங்களை மட்டுமே உற்பத்தி செய்கின்றன. இந்நிறுவனங்கள் வெளிநாடுகளில் ஆர்டர்கள் பெற்று அதற்கு ஏற்ப உற்பத்தி செய்து  ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்து வருகின்றன.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு  காலத்திற்கு முன்பாக அமெரிக்கா, தாய்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட  நாடுகளில் இருந்து சுமார் 200 கோடி அளவுக்கு ஏற்றுமதி ஆர்டர்களை எடுத்து  உற்பத்தியை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் திடீரென்று கொரோனா ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டதால் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. டெலிவரி  செய்வதற்கான காலக்கெடு முடிவடைய உள்ளதால், ஆர்டர்கள் பறிபோகும் நிலை  ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.   இதுகுறித்து  உற்பத்தியாளர்கள் கூறியதாவது: கொரோனா தொற்றால் கடந்த 2 மாதங்களாக  பணிகள் முழுமையாக முடங்கிக் கிடக்கின்றன. ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள  நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புறங்களில் மட்டுமே ஜவுளி நிறுவனங்கள்  செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஜவுளி  உற்பத்தி நிறுவனங்கள், ஜவுளி கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்படவில்லை.

இதன் காரணமாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள ஏற்றுமதி ரகங்களை மட்டுமே  தயாரிக்கும் நிறுவனங்கள் ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு பெறப்பட்ட ₹200 கோடி வெளிநாட்டு ஆர்டர்களை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த  ஆர்டர்கள் 3 மாதங்களில் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்ப வேண்டிய  நிலையில், தற்போது உற்பத்தி முடங்கியுள்ளதால் குறிப்பிட்ட காலத்தில்  துணிகளை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால் ஆர்டர்கள் பறிபோகும்  நிலை ஏற்பட்டுள்ளது. உலக பொருளாதாரம் முற்றிலுமாக முடங்கிய நிலையில்  இன்னும் 6 மாதங்களுக்கு வெளிநாட்டு ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே  ஏற்கனவே எடுத்த ஆர்டர்களை தயாரிக்க அனுமதி அளித்தால் மட்டுமே நிலைமையை  ஓரளவு சமாளிக்க முடியும். எனவே மாநகராட்சி, நகராட்சி பகுதியிலும் உள்ள  ஏற்றுமதி ஆயத்த ஆடை நிறுவனங்கள் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க  வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories:

>