×

கொரோனா ஊரடங்கு காரணமாக துபாயில் சிக்கி தவித்த 359 பேர் சென்னை திரும்பினர்

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக துபாயில் சிக்கி தவித்த 359 பேர் மீட்கப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டனர்.  துபாயில் இருந்து கொரோனாவால் தவித்த தமிழர்களை ஏற்றிக்கொண்டு 2 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று அதிகாலை சென்னை வந்தது. நள்ளிரவு 12.40 மணிக்கு வந்த முதல் விமானத்தில் 182 பேரும், அதிகாலை 1.40 மணிக்கு வந்த 2வது விமானத்தில் 3 குழந்தைகள் உட்பட 177 பேரும் வந்தனர். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை, குடியுரிமை, சுங்க சோதனை செய்யப்பட்டன. இவர்களை சென்னை மாநகராட்சி அதிகாரிகள், செங்கல்பட்டு மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் 356 பேரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்த தங்கவைக்கும் இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

இவர்கள் அனைவரும் அவர்களது உறவினர்கள், நண்பர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, 230 பேர் மேலக்கோட்டையூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியிலும், மற்ற 129 பேர் கிண்டியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலிலும் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களில் யாருக்கேனும் நோய் கண்டறியப்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.  நோய் இல்லாதவர்கள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

இவர்கள் வந்த ஒரு விமானத்தில், தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த லட்சுமணன் (56)  என்பவரது உடல் வந்தது. இந்த உடலுடன் அவரது மனைவி செல்லம்மாளும் வந்தார். தென்காசி மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள், உடலை பெற்று கொண்டு, செல்லம்மாளுடன் செங்கோட்டைக்கு சென்றனர். இறுதிச் சடங்கு முடிந்ததும், செல்லம்மாள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார் என்று வருவாய் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறப்பு அதிகாரி ஆய்வு
வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்க வைக்கப்பட்ட மேலக்கோட்டையூர் தனியார் பல்கலைக்கழக வளாகத்தை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தருமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags : persons ,Dubai ,Chennai , Corona, Curfew, Dubai, Madras
× RELATED பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி...