×

மூச்சு திணறலா உஷார்... சென்னையில் ஒரே நாளில் 3 பேர் பலி: 50 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்காணிக்க வேண்டும்

* தமிழக அரசுக்கு பொதுமக்கள் வலியுறுத்தல்
* ஒரே நாளில் சென்னையில் அடுத்தடுத்து 3 பெண்கள் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தனர். இறந்த 3 பேரும் 50 வயதை கடந்தவர்கள். கொரானா வைரஸ் தொற்றுக்கு மூச்சுத் திணறலும் ஒரு அறிகுறி. எனவே மூன்று பேரின் சளி மாதிரிகளையும் எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர்.

சென்னை: மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் ஒரே நாளில் 3 பெண்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே 50 வயதுக்கு மேல் உள்ளவர்களை கணக்கெடுத்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் 3 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்றாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் சளி மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் அதி தீவிரமாக நோய் தொற்று பரவி வருகிறது. சென்னையில் மட்டும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 399 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், கொரோனா நோய் தொற்று 2ம் நிலையில்தான் இருப்பதாகவும், இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் சென்னையில் மட்டும் 24 பேர் என தமிழகம் முழுவதும் 40 பேர் நேற்று முன்தினம் வரை உயிரிழந்துள்ளனர். நோய் தொற்றின் எண்ணிக்கையும் தினமும் 500க்கும் மேல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் நோய்தொற்று பாதிப்பு 6009 ஆக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் தாம்பரம் பகுதியை சேர்ந்த 77 வயது முதியவர் கொரோனாவுக்கு ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் சூளைமேடு பகுதியை சேர்ந்த 80 வயதான மூதாட்டி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து தமிழகத்தில் ெகாரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையை சேர்ந்த 61 வயது மூதாட்டிக்கு  நேற்று முன்தினம் இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை   ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோத்த  டாக்டர்கள் வரும் வழியிலே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேனாம்பேட்டை போலீசார் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சென்று அவரின் சளி மற்றும் ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.
அதைப்போன்று சேலையூர் சந்தோஷ்புரத்தை சேர்ந்த 53 வயது பெண்ணுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென  மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை குரோம்பேட்டை  அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும்  வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் மாங்காடு அடுத்த வடக்கு மலையம்பாக்கத்தை சேர்ந்த  அங்கன்வாடியில்  பணியாற்றிய 50 வயது பெண்ணுக்கு திடீரென காய்ச்சல்  ஏற்பட்டது. இதையடுத்து பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு  சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக  தெரிவித்தனர். மேலும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஒரே நாளில் சென்னையில் அடுத்தடுத்து 3 பெண்கள் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த 3 பேரும் 50 வயதை கடந்தவர்கள் என்பதால் கொரோனா தொற்றாக இருக்கலாம். கொேரானா வைரஸ் தொற்றுக்கு மூச்சுத் திணறலும் ஒரு அறிகுறி. எனவே மூன்று பேரின்  சளி மாதிரிகளையும் எடுத்து  ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர்.  ஆய்வு  முடிவில் தான் தொற்று உள்ளதா என தெரியவரும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இறந்தவர்களில் அதிகம் பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் வயதானவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அரசு 50 வயதுக்கு மேற்ப்பட்டவர்களை கணக்கெடுத்து கூடுதல் கவனம் செலுத்தி கொரோனா வைரஸ் இறப்பில் அவர்களை பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Breath Tingarala Ushar ,Chennai ,Tinarala , Shortness of breath, Government of Tamil Nadu, Madras, Corona
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...