×

மேற்குவங்கத்தில் தொழிலாளர் சிறப்பு ரயிலை அனுமதிக்காதது அநீதியாகும்: முதல்வர் மம்தாவிற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா கடிதம்

புதுடெல்லி: ‘‘வெளிமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயிலை மேற்கு வங்க அரசு அனுமதிக்காதது தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்’’ என முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி தொடங்கி தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வருகிற 17ம் தேதி வரை இந்த ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக போக்குவரத்து இல்லாததால் பல்வேறு மாநிலங்களிலும் சிக்கி தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலமாக சொந்த மாநிலங்கள் செல்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. கடந்த ஒரு வாரமாக ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் வெவ்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்வேறு மாநிலங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றது.

இதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி சென்றுள்ளனர். கொரோனா மருத்துவ பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அந்தந்த மாநில அரசுகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, மேற்குவங்க மாநிலம் வழியாக தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் செல்ல, அம்மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் நடவடிக்கைகள் தொடங்கியதில் இருந்தே மேற்கு வங்க அரசு மற்றும் மத்திய அரசு இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகின்றது. சமீபத்தில் கொரோனா நெருக்கடியை  மேற்கு வங்க அரசு எவ்வாறு கையாளுக்கிறது என்பது குறித்து மத்திய குழு ஆய்வு செய்தது. இதற்கு மம்தா பானர்ஜி அரசு சரியான முறையில் ஒத்துழைப்பு தரவில்லை.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடந்த வியாழன்று கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: பல்வேறு மாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திரும்ப அழைப்பதில் மேற்கு வங்க மாநில அரசானது மத்திய அரசுக்கு எதிர்பார்த்த ஒத்துழைப்பை வழங்கவில்லை. மாநில அரசு சிறப்பு ரயில்கள் மாநிலத்திற்குள் வருவதை அனுமதிக்கவில்லை. அரசின் இந்த போக்கானது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். அரசின் இத்தகைய போக்கால் தொழிலாளர்கள் மேலும் சிரமம் அடைவார்கள்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சந்தானு சென் கூறுகையில், “இது  மிகவும் துரதிஷ்டவசமானது. உள்துறை அமைச்சக செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில் முழுவதும் பொய் குற்றச்சாட்டுகளே கூறப்பட்டுள்ளது” என்று குற்றஞ்சாட்டினார்.

குற்றச்சாட்டை நிரூபியுங்கள் அல்லது மன்னிப்பு கேளுங்கள்
சிறப்பு ரயில்கள் மாநிலத்துக்குள் வருவதற்கு மேற்கு வங்க அரசு அனுமதி மறுப்பதாக அம்மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடிதம் எழுதியுள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும், முதல்வர் மம்தாவின் உறவினருமான அபிஷேக் பானர்ஜி குற்றச்சாட்டை நிரூபியுங்கள் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அபிஷேக் பானர்ஜி தனது டிவிட்டர் பதிவில், ‘‘கொரோனா வைரஸ் அதிகம் பரவிய நெருக்கடியான நேரத்தில் தனது கடமைகளை செய்யத் தவறி பல வாரங்கள் மவுனமாக இருந்துவிட்டு அமைச்சர் அமித்ஷா இப்போது பேசுகிறார்.

பொய் மூட்டைகளால் மக்களை தவறாக வழிநடத்துகிறார். தனது சொந்த அரசால் கைவிடப்பட்டு விதி என்ற பெயரில் புலம் பெயர்ந்த மக்கள் குறித்து இப்போது அமித்ஷா கவலைப்படுகிறார். உங்களது குற்றச்சாட்டை நிரூபியுங்கள் அல்லது மன்னிப்பு கேளுங்கள்” என பதிவிட்டுள்ளார்.


Tags : Amit Shah ,Chief Minister ,Home Minister ,CM Mamata ,West Bengal , Letter from West Bank, Labor, Special Train, Chief Minister Mamta, Home Minister Amit Shah
× RELATED மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி