×

பல மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லை நடுரோட்டில் படுத்து முதிய தம்பதி மறியல்: ஆண்டிபட்டி அருகே பரபரப்பு

ஆண்டிபட்டி: குடிநீர் விநியோகம் கேட்டு முதிய தம்பதி சாலையில் படுத்து மறியல் போராட்டம் நடத்தியதால்  ஆண்டிபட்டி அருகே பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கொத்தப்பட்டி ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு, குன்னூர் வைகை ஆற்றில் இருந்து  பாலக்கோம்பை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்து வந்தனர். குழாய் உடைப்பாலும், வறட்சியாலும் பல மாதங்களாக கொத்தப்பட்டிக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

இந்நிலையில், இந்தக் கிராமத்தை சேர்ந்த சுப்புராஜ் (77), அவரது மனைவி கிருஷ்ணம்மாள் (68) ஆகியோர், சீரான குடிநீர் விநியோகம் கோரி, நேற்று முன்தினம் ஆண்டிபட்டி - வேலப்பர்கோவில் சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.  சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், தொடர்ந்து குடிநீர் வழங்குவதாக உத்தரவாதம் அளித்தும், அவர்கள் எழுந்து செல்லவில்லை. சுமார் ஒரு மணிநேரம் சாலையிலேயே படுத்துக் கிடந்தனர். இதனால், அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரி போன்ற வாகனங்களும், இரு சக்கர வாகனங்களும் நிறுத்தப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து ராஜதானி போலீசார் வந்து, விரைவில் சீரான குடிநீர் விநியோகத்துக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முதிய தம்பதியரை சமாதானம் செய்தனர். அதன்பின் அவர்கள் இருவரும் எழுந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.Tags : road ,Antipatti ,Andipatti , Drinking water, no delivery, elderly couple, picketing, antipathy
× RELATED மதுரை மாவட்டம் சமயநல்லூரில் முதிய தம்பதி தூக்கிட்டு தற்கொலை