×

கொரோனா தடுப்பை விட்டுவிட்டு டாஸ்மாக் திறப்பில் தீவிரம் குமுறும் தாய்மார்களின் வீடியோ வைரல்: 40 நாட்களுக்கு பிறகு மீண்டும் குடும்ப வன்முறை தொடக்கம்

சென்னை: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் மே 17வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மே 3ம் தேதிக்கு பிறகு ஊரடங்கில் மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது. அதற்கு பிறகு தமிழகத்தில் ஒட்டுமொத்தமான தளர்வு நடைமுறைக்கு வந்தது. இதனால், இயல்பு நிலை திரும்பும் அளவுக்கு மக்கள் சாதாரணமாக சாலைகளிலும், கடைத்தெருக்களிலும் உலாவரத் தொடங்கிவிட்டனர். மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர் என்று தான் கூற வேண்டும். போலீசாரும் முன்பிருந்ததைப்போல் பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை.

இதனால், தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த குழப்பமான நிலையில்தான் தமிழக அரசு மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்தது. இதற்கு பொது மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், அரசு முடிவிலிருந்து மாறவில்லை.
இதையடுத்து, மே 7ம் தேதி சென்னையை தவிர தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மதுவை மறந்திருந்தவர்கள் டாஸ்மாக் கடைகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். கையில் பணம் இல்லை என்ற நிலையில் உள்ளவர்கள் கடன் வாங்கியும், வீட்டில் உள்ள தட்டுமுட்டு சாமான்களை மற்றவர்களிடம் அடகு வைத்தும் பணத்தை வாங்கி டாஸ்மாக் கடைகளுக்கு சென்றனர்.

கொரோனா பரவலைத் தடுக்கும் பணியை அதோகதியில் விட்டுவிட்டு தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறந்து கல்லா கட்டுவதில் தீவிரம் காட்டியது. அதற்கு ஏதுவாக உயர் நீதிமன்றமும் சில கட்டுப்பாடுகளுடன் கடையை திறக்கலாம் என்று உத்தரவிட்டது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் பெண்கள் பெரும் அதிருப்திக்கு ஆளாகினர். தனது கணவர், மகன்கள் மீண்டும் குடிக்கு அடிமையாகிவிடக்கூடாது என்று நம்பிக்கையுடன் இருந்த பெண்களுக்கு அரசின் முடிவு பேரிடியாகிவிட்டது. குடிக்கு அடிமையானவர்கள் திருந்துவதற்கும் ஒரு நல்ல வாய்ப்பாக கொரோனா ஊரடங்கு இருந்த நிலையில், தமிழகத்தில் எந்த வித குற்ற சம்பவங்களும்  நடக்கவில்லை.

ஆனால் இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் மது விற்பனையையும், அதனால் வரும் வருவாய் மட்டுமே அரசுக்கு தெரிந்தது. இது பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பல பெண்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து புலம்ப ஆரம்பித்துள்ளனர். இவை வைரலாக வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் உலவத் தொடங்கியுள்ளன. இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் மது போதையில் வந்த கணவனிடம் அடி வாங்கிக் கொண்டே பெண் ஒருவர், ‘போற உசுறு கொரோனாவோட போகட்டும். டாஸ்மாக் கடையை திறக்காதீங்க’ என்று கதறுகிறார். இந்த கதறல் வாட்ஸ் அப்களில் வைரலாக பரவி பார்ப்பவர்களின் மனதை கலங்கடித்து வருகிறது.

அதே வீடியோவில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் பலர் தங்கள் குமுறலை  வெளிப்படுத்தியுள்ளனர். அதில் அவர்கள், “ பெண் பிள்ளைகள் வாழ்க்கை எல்லாம் நாசமா போவுது. ஒரு மாதமாக மகிழ்ச்சியாக இருந்தோம். இன்னைக்கு இந்த வாழ்க்கை வாழறதுக்கு கொரோனாவோட இந்த உசுறு போகட்டும். பிரசவ வலிக்கு சேர்க்கப்பட்டுள்ள எனது பிள்ளையை பார்க்க போறதுக்கு கூட என்னிடம் காசு இல்ல. அதையும் பறிச்சிட்டு போய் குடிச்சிட்டு வந்துட்டாரு” என்று அழுகிறார். மற்றொரு பெண், “ குடிச்சிட்டு வந்து பொண்டாட்டி, பிள்ளைங்கள எல்லாம் வீட்ட விட்டு துரத்திட்டாங்க. வீட்ல ஒரே சண்டை. எங்களுக்கு கஞ்சி இல்லாட்டி கூட பரவாயில்ல. பிராந்தி கடைய ஏங்க தொறந்தீங்க.  வீட்ல உள்ள பொருள எல்லாம் வித்துட்டு குடிக்க போய்டாங்க. கொரோனா வந்து செத்தாலும் சாவுறோம். பிராந்தி கடை வேண்டாம். எங்க குடும்பத்த அழிக்கிறதுக்கின்னே கடையை தொறந்தீங்களா? என்று கதறுகிறார்.

இன்னொரு பெண், “ ஸ்கூல் திறக்க கூடாது, கோயில திறக்க கூடாது, கல்யாணம் பண்ண கூடாது என எதையுமே திறக்காம இன்னைக்கு டாஸ்மாக் கடையை மட்டும் ஏன் திறந்தீங்க. அதுக்கு எந்த துட்ட கொண்டாந்து கொட்டுவாங்க. வீட்ல இருக்க பொருள எல்லாம் விக்கறதுக்கு தூக்கிட்டு போய்ட்டான். எதையுமே திறக்காம அத மட்டும் திறந்தா எந்த பணத்தை கொண்டு வந்து குடிப்பான். நீங்களே சொல்லுங்க?” என்று சொல்லி அழுகிறார். டாஸ்மாக் கடைகள் திறப்பதால் பல பெண்கள் வாழ்வு மீண்டும் சீரழிந்துவிடுமோ என்று சமூக ஆர்வலர்கள் கூறும் நிலையில், மதுக்கடைகளை திறந்துள்ளதை கேட்டு பல பெண்கள் கதறி அழும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருவது பார்ப்பவர்களின் இதயத்தை கனக்க வைக்கிறது. இதை அரசு கவனிக்க வேண்டும் என்பதை அனைவரின் விருப்பமும் எதிர்பார்ப்பும் ஆகும்.

Tags : mothers ,barrier ,task force ,start ,Corona , Corona, Tasmac, Video
× RELATED நாடாளுமன்றத் தொகுதி வாரியாக அதிமுக...