×

பெற்றோரை பார்த்துக் கொள்ள சகோதரனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியபின் மெரினா கடலில் விழுந்து பயிற்சி மருத்துவர் தற்கொலை

* குடும்ப பிரச்னையா? வேறு காரணமா என போலீஸ் விசாரணை

சென்னை: பெற்றோரை பார்த்துக் கொள்ளும்படி சகோதரனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பிய பின் பயிற்சி மருத்துவர் மெரினா கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்னையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக சென்னை முழுவதும் ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா தலங்கள் மற்றும் மெரினா கடற்கரையில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் மெரினா விவேகானந்தர் இல்லம் எதிரே நேற்று முன்தினம் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உடல் சந்தேகத்திற்கு இடமான வகையில் கரை ஒதுங்கியது. இது குறித்து கடற்கரை பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் மெரினா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மெரினா போலீசார் இறந்த வாலிபர் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலை, சியாமலா கார்டன் பகுதியை சேர்ந்த அர்ஜூன் (35) என்பது தெரியவந்தது.  இவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால், அர்ஜூன் தனது குடும்பத்தினரிடம் சண்டை போட்டுவிட்டு சில நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் அர்ஜூன் நேற்று முன்தினம் 3 மணிக்கு தனது விலை உயர்ந்த காரை எடுத்துக் கொண்டு கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்து மெரினா கடற்கரை பகுதிக்கு வந்துள்ளார்.

பின்னர் காரை கலங்கரை விளக்கம் அருகே நிறுத்தி விட்டு தனது சகோதரனுக்கு வாட்ஸ் அப்பில் ‘நான் எடுக்கும் தற்கொலை முடிவுக்கு யாரும் காரணமல்ல அப்பா, அம்மாவை பத்திரமாக பார்த்துக் கொள்’ என்று கூறி கார் இருக்கும் இடத்தையும் குறுஞ்செய்தி மூலம் தன்னுடைய சகோதரனுக்கு அனுப்பியுள்ளார். அதன் பிறகு மக்கள் நடமாட்டம் இல்லாததால் அர்ஜுன் கடலில் இறங்கி தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமணம் ஆகாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது காதல் விவகாரத்தில் பெற்றோரிடம் சண்டை போட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மெரினா கடற்கரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



Tags : brother ,Marina ,sea ,parents , Parent, brother, sms, marina marine, coaching physician suicide
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்