×

தமிழக வாகனங்களுக்கு தொடரும் ‘கெடுபிடி’ கர்நாடக, ஆந்திரா எல்லையில் மணிக்கணக்கில் காத்திருப்பு

* சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாமல் மக்கள் அவதி
* அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை: தமிழக வாகனங்களுக்கு தொடர்ந்து கெடுபிடி காட்டப்படுவதால் கர்நாடக, ஆந்திரா எல்லையில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக சொந்த மாநிலங்களுக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இது குறித்து தமிழக சுதந்திர வாடகை வாகன ஓட்டுனர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜூட் மேத்யூ கூறியதாவது: ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மருத்துவம், திருமணம், மரணம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக பலரும் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்கிறார்கள்.

இவ்வாறு தமிழகத்தில் இருந்தும் ஏராளமானவர்கள் வாடகைகார்கள் மூலமாகவும், சொந்த வாகனங்கள் மூலமாகவும் செல்கிறார்கள். தமிழகத்தில் இருந்து கர்நாடக செல்லும் போது ஓசூர், கக்கனூர் போன்ற இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஒவ்வொரு வாகனமாக அனுமதிக்கப்படுவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் பலமணி நேரம் காத்துக்கிடக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் அங்கு இ-பாஸ் பதிவு செய்வதற்கும் நீண்ட நேரம் ஆகிறது.  இதே நிலைதான் தமிழக-ஆந்திரா எல்லையிலும் ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக செல்வோர் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

தமிழக-கேரளா எல்லையிலும் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தமிழகத்தில் இருந்து வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகிறது. பிறகு இ-பாஸ் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. தொடர்ந்து ஓட்டுனர், பயணிகளின் உடல் வெப்பநிலை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. அவை அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக அனுப்பி வைக்கப்படுகின்றனர். தமிழகம்-ஆந்திரா, தமிழகம்-கர்நாடக எல்லைகளை விட இங்கு பெரிய அளவில் கெடுபிடிகள் இல்லை. கேரளா போல் அனைத்து இடங்களிலும் தமிழகத்தில் இருந்து வரும் வாகனங்களை உடனடியாக அனுப்ப வேண்டும். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

காரணம் என்ன?
கேரளா, ஆந்திரா, கர்நாடகாவை விட தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம். மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் தகவல்படி நேற்று மதிய நிலவரப்படி கேரளாவில் 503 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும், 484 பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பியவர்கள் எனவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆகவும் கூறப்பட்டுள்ளது. இதேபோல் ஆந்திராவில் கொரோனா உறுதி-1887 பேர், வீடு திரும்பியவர்கள் 842, இறப்பு- 41 ஆகவுள்ளது. கர்நாடகாவில் கொரோனா உறுதி-753, வீடு திரும்பியவர்கள்-376, இறப்பு-30ஆகவும் உள்ளது. தமிழகத்தில் கொரோனா உறுதி-6009, வீடு திரும்பியவர்கள்-1,605, இறப்பு-40 ஆகவும் உள்ளது. இவ்வாறு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், இங்கிருந்து செல்லும் வாகனங்களுக்கு பிற மாநிலங்களில் கெடுபிடி காட்டப்படுகிறது.



Tags : Kedupidi ,Karnataka ,Tamil Nadu ,Andhra Pradesh ,border , Tamil Nadu Vehicles, Karnataka, Andhra Pradesh, Standby
× RELATED தமிழக- கர்நாடக மலைப்பாதையில் சாலையில்...