×

அமித்ஷா உடல்நிலை வதந்திகளால் பரபரப்பு: பாஜ கண்டனம்

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று நாடு முழுவதும் வத‍ந்திகள் பரவியது. இதற்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜ முன்னாள் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகியது. ஆனால், அவர் நலமுடன் உள்ளார். அவரைப் பற்றிய வதந்திகளுக்கு பாஜ தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாஜ பொது செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா கூறுகையில், ``அமித்ஷா எடுக்கும் முடிவுகள், அவரது செயல்திறனை பார்த்து பிடிக்காதவர்கள் வத‍ந்தி பரப்புகின்றனர். இதுவொரு அரசியல் சதி’’ என்று கூறினார். `‘இதுபோன்ற வதந்தி பரப்புவது மிகவும் வெட்கக் கேடானது.  இதை பரப்பியவர்கள் தேசத்துரோகிகள்’’ என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் கூறியுள்ளார்.

பாஜ தலைவர் ஜே.பி.நட்டா, டிவிட்டர் பதிவில், ``உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து வதந்தி பரப்பியது மனிதாபிமானமற்றது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒருவரது உடல்நிலை பற்றி தவறான தகவலை பரப்புவதில் இருந்து அவர்களது மனநிலையை அறிந்து கொள்ள முடியும். இதை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன்’’ என்று கூறியுள்ளார். இதனிடையே அமித்ஷா தனது டிவிட்டர் பதிவில், தான் நலமுடன் இருப்பதாகவும் வதந்தி பரப்பியவர்கள் கற்பனையில் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று பதில் கூறவில்லை எனவும் கட்சித் தொண்டர்கள் மற்றும் நலம் விரும்பிகளால், எந்த நோயுமின்றி உடல் நலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags : Amit Shah ,Baja ,BJP , Amit Shah, Health, BJP
× RELATED ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள்...