×

கோயம்பேட்டில் இருந்து தென்காசி திரும்பியவர் டாஸ்மாக் வரிசையில் நின்றவருக்கு கொரோனா: முண்டியடித்த குடிமகன்கள் கலக்கம்

சுரண்டை: தென்காசியில் டாஸ்மாக் கடையில் மதுவாங்க வரிசையில் நின்றவருக்கு கொரோனா பாதிப்பால் அவரோடு நின்றிருந்த குடிமகன்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவிற்குட்பட்ட சேர்ந்தமரம் கள்ளம்புளி ரோட்டைச் சேர்ந்த 35 வயது நபர், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் லோடுமேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இங்கு கொரோனா தொற்று அதிகமானதால் மார்க்கெட் மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனது சொந்த ஊரான சேர்ந்தமரத்திற்கு 4 லாரிகளில் மாறி மாறி சங்கரன்கோவில் வந்துள்ளார். இங்கிருந்து நடந்தே சேர்ந்தமரத்திற்கு கடந்த 6ம் தேதி மதியம் வந்தார். வீட்டுக்கு வந்தவர் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

தகவலறிந்து சுகாதாரத்துறையினர் 7ம் தேதி காலை அவரை தென்காசி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சளி, ரத்த மாதிரி எடுத்து விட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை கூறி அனுப்பினர். ஆனால் வீட்டிற்கு வந்தவர், 7ம் தேதி ஊரணி தெருவை சேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்தமரம் கள்ளம்புளி அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று உள்ளார். அங்கு வரிசையில் நின்று, முண்டியடித்து 500 ரூபாய் நோட்டுகள் மூன்றை மாற்றி மது வாங்கி அருந்தியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறையினர், அவரை ஆம்புலன்சில் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிறப்பு வார்டில் அனுமதித்தனர். அவர் தங்கியிருந்த வீடு மற்றும் சுற்றுப்பகுதியை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

இதனிடையே ெகாரோனாவால் பாதிக்கப்பட்டவரிடம் அவரது சகோதரரும் பணம் பெற்றுச் சென்று அங்குள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்கியதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியும் காவல்துறையினரால் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. சேர்ந்தமரத்தின் நான்கு எல்லைகளும் சீல் வைக்கப்பட்டு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. சென்னையில் இருந்து வந்தவர்கள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் உட்பட  20க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.  கோயம்பேட்டில் இருந்து சேர்ந்தமரம் வந்தவருக்கு கொரோனா உறுதியானதால், டாஸ்மாக் மது வாங்க வரிசையில் நின்ற குடிமகன்கள் மத்தியில் பெரும் கலக்கம் ஏற்பட்டுள்ளது.


Tags : Coimbatore ,citizens ,Tenkasi ,Task Force Corona , Coimbatore, Tenkasi, Tasmak, Corona, Citizens
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்