×

கொரோனாவுக்காக களத்தில் பணியாற்றியும் ஊதியமில்லை, உணவுப்படியும் இல்லை: ஊர்காவல் படையினர் குமுறல்

நெல்லை: தமிழகத்தில் கொரோனா காலத்தில் களப்பணியாற்றும் ஊர்காவல் படையினருக்கு சம்பளம் வழங்குவது தாமதமாகி வருவதால், அவர்கள் திண்டாடுகின்றனர். அரசு அறிவித்த உணவுப்படியும் இதுநாள் வரை வந்து சேரவில்லை என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் ஊர்காவல் படை வீரர்கள் 14 ஆயிரத்து 708 பேர் பணியாற்றி வருகின்றனர். காவல்துறையினர் செய்யும் பல்வேறு பணிகளுக்கு துணையாக இவர்களும் களத்தில் நின்று இரவு, பகலாக பணி மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையில் 2ம் நிலை காவலர் செய்யக்கூடிய பெரும்பாலான பணிகளை ஊர்காவல் படையினர் செய்வதோடு, காவல்துறையின் சுமையையும் குறைக்கின்றனர்.
 கொரோனா பரவலை ஒட்டி கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு போடப்பட்டது. இதன் காரணமாக போலீசார் பாதுகாப்பு பணிகளை விரைவுபடுத்தினர்.

ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைத்து, தேவையின்றி வாகனங்களில் வருவோர் கண்டறியப்பட்டனர். இதில் போலீசாருக்கு உதவியாக ஊர்காவல் படையினரும் நியமிக்கப்பட்டனர். ஊர்காவல் படையினரை பொறுத்தவரை மாதத்திற்கு 5 டூட்டி மட்டுமே அளிக்க அரசு உத்தரவிட்டிருந்தது. அதாவது ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வீதம் 5 டூட்டிகளை அளித்திட கேட்டுக் கொண்டது. ஆனால், தற்போது பல மாவட்டங்களில் அவர்களுக்கு ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வீதம் 10 டூட்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா காலத்தில் ஊர்காவல் படையினருக்கு 20 நாட்கள் டூட்டி வழங்க அரசு உத்தரவிட்டது. அதாவது 2 வாரம் அவர்கள் தொடர்ச்சியாக பணியாற்ற வேண்டும். பின்பு ஒரு வாரம் ஓய்வில் இருக்க வேண்டும். மீண்டும் 2 வாரங்கள் பணிக்கு வரவேண்டும். ஊர்காவல் படைக்கு கொரோனா காலத்தில் காலை 8 முதல் பிற்பகல் 2 மணி, பிற்பகல் 2  முதல் இரவு 9 மணி, இரவு 9 முதல் காலை 8 மணி என 3 விதமான பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கொரோனா காலத்தில் பணியாற்றும் ஓய்வு பெற்ற 2000 எல்லைப் பாதுகாப்புபடையினருக்கும், 14,708 ஊர்காவல் படையினருக்கும் மார்ச் 27ம் தேதி முதல் மே 17ம் தேதிவரை உணவுப்படி வழங்கப்படுகிறது. இதற்காக எல்லைப்பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தினமும் ரூ.900 வீதமும், வீரர்களுக்கு ரூ.750 வீதமும், ஊர்காவல் படையினருக்கு தினமும் ரூ.150 வீதமும் உணவுப்படி வழங்க ரூ.9 கோடியே 78 லட்சத்து 43 ஆயிரத்து 500 ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இன்று வரை ஊர்காவல் படையினருக்கு உணவுப்படி வந்து சேரவில்லை. அவர்களோடு இணைந்து பணியாற்றும் போலீசாருக்கு ஒருநாள் உணவுப்படி ரூ.250 அனைவருக்கும் அளிக்கப்பட்டு விட்டது. கொரோனாவில் தொடர்ந்து பணியாற்றி வரும் ஊர்க்காவல் படையினருக்கு மாத ஊதியமும் அளிக்கப்படவில்லை. இதனால் அவர்களது குடும்பங்கள் ஊரடங்கில் உணவுக்கு வழியின்றி தவிக்கின்றன. சம்பளமும் இல்லாமல், உணவுப்படியும் இன்றி எப்படி களப்பணியாற்றுவது என ஊர்க்காவல் படையினர் குமுறுகின்றனர்.

மார்ச் 15ம் தேதி வரை மட்டுமே பல ஊர்காவல்படை வீரர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொடங்கிய நாள் முதல் இன்று வரை ஊதியம் இல்லாததால், அவர்கள் திண்டாடுகின்றனர். இதுகுறித்து ஊர்காவல் படை வீரர்கள் கூறுகையில், ‘‘எங்களின் பணி விருப்பத்தின் அடிப்படையிலான பணி. இருப்பினும் காவல்துறையினர் எப்போது அழைத்தாலும் பணிக்கு வருகிறோம். இதனால் எங்களில் பலரால் வேறு வேலைக்கு செல்ல முடிவதில்லை. கொரோனா பரவல் காலத்தில் சாலைகளில், தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் அச்சத்தோடு நாங்கள் பணியாற்றி வருகிறோம். அரசு தொடக்கத்தில் எங்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கவில்லை.

ஏப்ரல் பிற்பகுதியில்தான் எங்களுக்கு கையுறையும், முக கவசமும் வழங்கப்பட்டது. எங்களுக்கு அறிவிக்கப்பட்ட உணவுப்படி, மாத ஊதியம் எதுவும் கொரோனா ஊரடங்கு தொடங்கியதில் இருந்து இன்று வரை வந்து சேரவில்லை. ஊரடங்கு காரணமாக குடும்பத்தை காப்பாற்ற கூடுதல் செலவுகள் செய்ய வேண்டியுள்ளது. இச்சூழ்நிலையில் அரசுக்கு எங்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம் மற்றும் உணவுப்படியை விரைந்து வழங்கிட வேண்டும். உணவுப்படியை அதிகரிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இலவச ஆயுள் காப்பீடு
கொரோனா பாதிப்புள்ள பகுதிகளில் பொதுமக்கள் வெளியே வருவதை தடுக்க காவல்துறையினரை விட ஊர்காவல் படையினரே கூடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையில் சேர வேண்டும் என்ற கனவுகளோடு ஊர்காவல் படையில் சேர்ந்து பணியாற்றும் பலருக்கு, இக்காலக்கட்டத்தில் நோய் தொற்று பரவும் அபாயங்கள் உள்ளன. கூட்டம் அதிகமுள்ள பகுதிகளுக்கும் ஊர்காவல் படையினரே அழைத்துச் செல்லப்படுகின்றனர். எனவே தங்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு, பேரிடர் படி ஆகியவற்றை வழங்க அரசு முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பணி நிரந்தரம் முக்கியம்
தமிழக காவல்துறையில் சமீபத்திய கணக்கெடுப்புபடி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதன் காரணமாக தமிழகத்தில் 700 பேருக்கு ஒரு காவலர் என்ற அவலம் காணப்படுகிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இளைஞர் காவல் படைக்கு எடுக்கப்பட்டவர்கள், விரைவில் காவல்துறைக்கு எடுத்து கொள்ளப்பட்டனர். அதேபோல் காலி பணியிடங்களில் ஊர்க்காவல் படையினரையும் தேவைக்கேற்ப நிரப்ப அரசு முன்வர வேண்டும். அப்போது ஊர்காவல் படையில் பணியாற்றுவோருக்கு உற்சாகம் பிறக்கும்.



Tags : guard ,Corona ,Kayts ,Corona utiyamillai , Corona, Food, Home Guard
× RELATED இலங்கைக்கு படகில் கடத்திய ரூ.400 கோடி...