×

பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய மறுப்பு: அலைகழிப்பதாக குற்றச்சாட்டு

அண்ணாநகர்: சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் அரசு அதிகாரிகள், போலீசார், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், மாநகராட்சி அதிகாரிகள், தீயணைப்பு துறையினருக்கு நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களில் பலருக்கு காய்ச்சல், சளி உள்ளதால், பரிசோதனை செய்ய அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்கின்றனர்.

இவ்வாறு செல்பவர்களை மருத்துவமனை ஊழியர்கள், போலீசாருக்கு இங்கு பரிசோதனை செய்வதில்லை. எனவே, நீங்கள் அரசு பொது மருத்துவமனை செல்லுங்கள் என திருப்பி அனுப்புவதாக கூறப்படுகிறது. அதன்படி, அரசு பொது மருத்துவமனைகளுக்கு சென்றால், அங்குள்ள ஊழியர்கள், பல்வேறு காரணங்களை கூறி, பரிசோதனை செய்யாமல் திருப்பி அனுப்புவதாக கூறப்படுகிறது.  அமைந்தகரை காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் கொரோனா பரிசோதனைக்காக எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்றபோது அங்கிருந்தவர்கள், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என கூறி உள்ளனர்.

 அங்கு சென்றபோது, நீங்கள் எழும்பூரிலேயே பரிசோதனை செய்து கொள்ளுங்கள், என திருப்பி அனுப்பி உள்ளனர். இதேபோல், அண்ணாநகர் மண்டலத்தில் பணிபுரியும் பல காவலர்களை அதிகாரிகள் அலைகழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், போலீசார் காய்ச்சல் அறிகுறியுடன் கடும் மன உளைச்சலில் பணிபுரிந்து வருகின்றனர்.

Tags : Coroner ,assault Coroner , Security Corps, Police, Corona Inspection
× RELATED கொடநாடு விவகாரம் இபிஎஸ், ஓபிஎஸ் இன்று கவர்னரிடம் முறையிட முடிவு