×

சென்னையில் ஒரே நாளில் அடுத்தடுத்து கொரோனாவுக்கு 4 பெண்கள் பலி: பொதுமக்கள் அச்சம்

சென்னை: சென்னையில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 4 பெண்கள் இறந்தனர். சென்னை திருவிக நகர் மண்டலத்துக்கு உட்பட்ட பெரம்பூர் வாஞ்சிநாதன் மெயின் ரோடு கிரேஸ் வில்லா பகுதியை சேர்ந்த 56 வயது பெண், சர்க்கரை நோய் மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக பெரம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு உடல்நிலை மோசமானதால், நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த இவர், நேற்று முன்தினம்  இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, இவரது உடல் திருவிக நகர் தாங்கள் மயானத்தில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதேபோல் சென்னை திருவிக நகர் மண்டலத்துக்கு  உட்பட்ட புளியந்தோப்பு, சிவராஜபுரம், 5வது தெருவை சேர்ந்த 64 வயது பெண்  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு கடந்த 1ம் தேதி ராஜிவ்காந்தி அரசு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி  அளவில் அந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவரது உடலை  மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர்  கீழ்ப்பாக்கம் கல்லறையில்  அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.  இதன் மூலம் திருவிக நகர் மண்டலத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியை  சேர்ந்த 53 வயது பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம்  திடீரென இறந்தார்.

இதுபற்றி அறிந்த ஆர்.கே.நகர் போலீசார் சம்பவ  இடத்துக்கு சென்று, அந்த பெண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது.  இதையடுத்து சுகாதாரத்துறை  அறிவுறுத்தலின்படி, அந்த பெண்ணின் உடல் முழு பாதுகாப்புடன்  வண்ணாரப்பேட்டையில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. அண்ணாநகர்: வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 58 வயது பெண்ணுக்கு, கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்ததால், வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்  கடந்த 7ம் தேதி அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, காய்ச்சல் அதிகமானாதால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவரது ரத்த மாதிரை பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
சென்னையில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த சம்பவம் பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. 16 பேர் பாதிப்பு: வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரில் ஏற்கனவே ஒரே தெருவில் 16 பேருக்கு நோய் தொற்று உள்ளது. இந்நிலையில், அதே பகுதியில் நேற்று மேலும் 4 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டது.

இதேபோல், வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகரில் 4 பேருக்கும், சோலையப்பன் தெருவில் 2 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட சேணியம்மன் கோயில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மாநகராட்சி டிரைவராக பணிபுரிந்து வந்த 30 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மேலும் 25 பேர் பாதிப்பு
சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்தில் இதுவரை 45 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் தொற்றை தடுக்க மண்டல சுகாதார அதிகாரிகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், நாளுக்கு நாள் நோய் தொற்று அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், திருவொற்றியூர் மண்டலத்தில் நேற்று முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 3 உட்பட  18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் திருவொற்றியூர் மண்டலத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல், மணலியில் நேற்று 7 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. திருவொற்றியூர் மற்றும் மணலி மண்டல பகுதிகளில் தொடர்ந்து வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சி ஊழியரின்
மகனுக்கு கொரோனா
மண்ணடி கார்பரேஷன் காலனியை சேர்ந்த மாநகராட்சி ஊழியர், திருவல்லிக்கேணி பகுதியில் கொசு மருந்து அடித்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டதால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். அவரது ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. இதனிடையே, இவரது மகனுக்கு காய்ச்சல், சளி இருப்பது தெரிந்தது. அவருக்கு பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று இருப்பதாக தெரிய வந்தது. உடனே, சுகாதார துறையினர் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  தொடர்ந்து, அவருடைய குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், அந்த பகுதியில் சாலைகள் மூடப்பட்டு, சுகாதாரத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

மடிப்பாக்கத்தில் 6 பேருக்கு தொற்று
மடிப்பாக்கம் ஈஸ்வரன் கோயில் தெருவில் உள்ள ஒரு தம்பதி, கீழ்க்கட்டளை பகுதியை சேர்ந்த மற்றொரு தம்பதி, மடிப்பாக்கம் ஜேம்ஸ் தெருவை சேர்ந்த பெண், புழுதிவாக்கம் மணிமேகலை தெருவை சேர்ந்த ஒருபெண் என 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று தெரிய வந்தது. இதையடுத்து, நோய் தொற்று ஏற்பட்ட  6 பேரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுதித்துள்ளனர்.  இதன்மூலம் பெருங்குடி மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32ஆக உயர்ந்தது.

Tags : women ,Chennai , Madras, Corona, 4 women killed, civilians
× RELATED கள்ளழகர் திருவிழாவில் நகை திருட்டு: 5 பெண்கள் கைது