×

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு: நாளை முதல் டீக்கடைகள் திறக்க அனுமதி: இரவு 7 மணி வரை தனி கடைகள் செயல்படலாம்

* 33% ஊழியர்களுடன் தனியார் நிறுவனங்கள் இயங்க உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை முதல் டீக்கடைகள் செயல்படலாம். ஆனால், பார்சல்கள் மட்டுமே வழங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும், கடைகள், பெட்ரோல் பங்க்குகள் திறந்திருக்கும் நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து மே 3ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த 40 நாட்கள், அத்தியாவசிய பணிகள் தவிர வேறு எந்த பணிகளும் செயல்பட அரசு அனுமதிக்கவில்லை. கடந்த 4ம் தேதி முதல் வருகிற 17ம் தேதி வரை மூன்றாம் கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது.

ஆனாலும், தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, பிற இடங்களில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டது. தனி கடைகள், தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை (11ம் தேதி) முதல் ஊரடங்கு மேலும் தளர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) கீழ்க்காணும் பணிகள், 11.5.2020 (நாளை) முதல் குறிப்பிடப்பட்ட நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். பிற தனிக்கடைகள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். பிற தனிக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். சென்னை மாநகராட்சி உட்பட தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) டீக்கடைகள் பார்சல் சேவைக்கு மட்டும், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அங்கு சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். தினமும் 5 முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும். கடையில், வாடிக்கையாளர்கள் நின்றோ, அமர்ந்தோ, ஏதும் உட்கொள்ள அனுமதி இல்லை. தவறினால் உடனடியாக கடைகள் மூடப்படும்.

பெட்ரோல் பங்க் சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். மற்ற பகுதிகளில், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்க்குகள் 24 மணி நேரமும் செயல்படும். சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். மற்ற அனைத்து பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும். தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதையும், போதுமான கிருமி நாசினிகளை பயன்படுத்த வேண்டும்.

இதை கண்காணிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மாநகராட்சி ஆணையாளர்கள், காவல் துறையினரும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்தநேரத்தில், ஊரடங்கு பெருமளவில் தளர்த்தப்பட்டு வருகிறது. இதனால் கொரோனாவை சமாளிக்க தமிழக அரசு என்ன திட்டங்கள் வைத்துள்ளது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Tags : deck shops ,Tamil Nadu ,shops ,State ,stores , Tamil Nadu, curfew, teak shops, individual shops
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...