×

அழகர்கோயிலில் சித்திரை திருவிழா: பூப்பல்லக்கில் எழுந்தருளி வலம் வந்த அழகர்

அலங்காநல்லூர்: மதுரை அழகர்கோயிலில் நடந்த சித்திரை திருவிழாவில் அழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி கோயிலை வலம் வந்தார். இத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெற்றது. மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றது. கொரோனா பரவல் எதிரொலியாக இத்திருவிழா ரத்து செய்யப்பட்டது. முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் கடந்த 4ம் தேதி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் 4 பட்டர்களால் நடத்தப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க அழகர், மதுரை வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் அதிகாலை நடந்திருக்க வேண்டும்.

இந்நிகழ்வோடு, மண்டூக முனிவருக்கு மோட்சம் தரும் நிகழ்வையும் ஆகம விதிப்படி மதுரை அழகர்கோவில் வளாகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று அழகர்கோவில் வளாகத்தில், அதிகாலை 3 மணி முதல் துவங்கி மாலை வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நேற்று நண்பகல் 12 மணிக்கு பச்சை பட்டுடுத்தி, தங்கக்குதிரை வாகனத்தில் கோயில் வளாகத்தில் ‘வைகை ஆறு’ போல செயற்கையாக வடிவமைக்கப்பட்ட தாமரை தடாகத்தில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடத்தப்பட்டது. அப்போது மதுரை வைகை ஆற்றில் வழக்கமாக செய்யப்படும் அனைத்து பூஜைகளும் ஆகம விதிப்படி நடைபெற்றது.

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணிக்குள் கள்ளழகர் என்கிற சுந்தரராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கும் ‘மோட்ச புராணம்’ நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த திருவிழாவின் அனைத்து நிகழ்வுகளையும் www.tnhrce.gov.in என்ற இணையதள வாயிலாகவும், youtube temble live streaming மற்றும் கள்ளழகர் கோயில் முகநூல் மூலமாகவும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வீட்டிலிருந்தபடியே தரிசனம் செய்தனர்.  நேற்றிரவு 11 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் அழகர் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வந்து அருள்பாலித்தார்.

தொடர்ந்து ஆகம விதிப்படி பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. பூப்பல்லக்கு உற்சவத்துடன் மதுரையின் புகழ்மிக்க சித்திரை திருவிழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், கோயில் நிர்வாக அதிகாரி அனிதா தலைமையில் கண்காணிப்பாளர்கள், கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags : festival ,Chitra ,Alagarakovil Alagarakovil ,Chitra Festival , Alagir Temple, Chitra Festival, Alaghar
× RELATED சீனாவின் டிராகன் படகுத் திருவிழா கோலாகலம்..!!