×

சூதாட அனுமதி கேட்டு உச்சநீதிமன்றம் செல்லுமாம் தமிழக அரசு; டாஸ்மாக் மேல்முறையீடு குறித்து கமல்ஹாசன் கண்டனம்

சென்னை: டாஸ்மாக் கடைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இதற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் கட்டுப்ப்படுத்தப்பட்ட பகுதிகள், சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்பட்டது. ஆனால் மக்கள் நீதி மய்யம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், ஊரடங்கு உள்ளபோது மதுக்கடைகளை திறந்தது ஆபத்தானது எனவும், உயர் நீதிமன்றத்தின் விதிமுறைகள் மதுக்கடைகளில் பின்பற்றப்படவில்லை என கூறப்பட்டது. தனிமனித இடைவெளி பின்பற்றப்பட வில்லை என்று  டாஸ்மாக் மதுக்கடைகளை வரும் 17ம் தேதி வரை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இனி ஆன்லைன் மூலம் மட்டுமே மது விற்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வழக்கறிஞர் ராஜேஷ், மக்கள் நீதி மய்யம் உள்பட பல்வேறு தரப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இப்படி உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதனை விமர்சித்துள்ள கமல்ஹாசன், “குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட தமிழ் பெண்களின் தாலிகளோடு, குடிக்காத தமிழர்களின் உயிரையும் பணயம் வைத்து, சூதாட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லுமாம் தமிழக அரசு. எங்கும் வருவோம் உமைத் தடுக்க. மக்கள் நீதியே வெல்லும். என்று ட்வீட் செய்துள்ளார். தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Supreme Court ,Kamal Haasan ,Tasmak , Supreme Court, Government of Tamil Nadu, Tasmak, Appeal, Kamal Haasan
× RELATED மக்களை மதம், மொழி, இனத்தால்...