×

உலகின் 6 கண்டங்களில் பரவிய கொரோனா: கால்பதிக்காத ஒரே கண்டம் என்ற சாதனையை சத்தம் இல்லாமல் தன்வசம் வைத்திருக்கும் அண்டார்டிகா

ஆர்க்டிக்: உலகின் 6 கண்டங்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் பாதிப்பு இல்லாத ஒரே கண்டமாக அண்டார்டிகா உள்ளது. பூமியின் மிக குளிர்ச்சியான பகுதியான அண்டார்டிகாவில் தற்போது வரை ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. உலகையே கொரோனா அச்சுறுத்தும் இந்த சூழலில் பூமியின் மிகவும் பாதுகாப்பான இடமாக அண்டார்டிகா கருதப்படுகிறது. அங்கு பூர்வக்குடி மக்கள் யாரும் இல்லாத நிலையில் பென்குவின்கள், திமிங்கலங்கள் மற்றும் கடல் சீல்களை தவிர்த்து பல்வேறு பகுதிகளில் உள்ள மனிதர்களின் மொத்த எண்ணிக்கையே 5,000-ஆக தான் உள்ளது.  

அவர்களில் பெரும்பாலானோர், விஜ்ஜானிகளாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் உள்ளனர். அவர்களில் ஒரு பெண் ஆராய்ச்சியாளர் கொரோனா பயத்தில் உலகமே மூழ்கி இருக்கும் நிலையில் அண்டார்டிகாவில் இருக்கும் ஒவ்வொரு நபரும் இங்கு பாதுகாப்பாக இருப்பதற்கு நன்றி உணர்வோடு உள்ளனர் என கூறினார். இவர் அமெரிக்க நிறுவனம் ஒன்றின் ஒருங்கிணைப்பாளராக அண்டார்டிகாவில் பணிபுரிந்து வருகிறார். பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே நிறுவனத்தில் பணிபுரியும் ஸ்கார்லாந்தை சேர்ந்த ராபர்ட் டெய்லர் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது முதல் அது தொடர்பான தகவல்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறுகிறார்.

இந்த நிலையில் அண்டார்டிகாவுக்கு கடந்த 2 ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அங்கு சுற்றுலாத்துறை பெரிய சரிவை சந்திக்கும் என கூறப்படுகிறது. வரலாற்றில் இது போன்ற இக்கட்டான நேரத்தில் தங்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அன்பானவர்களின் இருந்து பிரிந்து வெகு தொலைவில் உலகின் எங்கோ ஒரு பகுதியில் இருப்பதால் ஒருவிதமான வருத்தம் ஏற்படுகிறது என அண்டார்டிகாவில் பணிபுரிகின்ற சில ஆராய்ச்சியாளர்கள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

அதே சமயம் அங்கு இருக்கும் பனி படர்ந்த இயற்கை சூழலில் வாழ்க்கையும் வேலையும் பிரிக்க முடியாத வகையில் பின்னி பிணைந்ததாக உள்ளது. பல்வேறு நாடுகள் ஊரடங்கு அறிவித்துள்ள தற்போதைய சூழலிலும் அண்டார்டிகாவில் உள்ளவர்கள் தங்களது வேலைகளை எவ்வித இடையூறும் இன்றி செய்து வருகின்றனர். அண்டார்டிகா தவிர்த்து வடகொரியா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், மார்ஷல் தீவுகள், சமோவா உள்ளிட்ட 15 நாடுகளிலும் கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் ஒரு கண்டம் முழுவதும் கொரோனா தொற்று இல்லாமல் இருப்பது அண்டார்டிகாவில் தான்.

பல வல்லரசு நாடுகளை திணற வைத்து உலகின் பெரும்பாலான முன்னணி மருத்துவத்துறை விஞ்ஞானிகளுக்கு சவாலாக இருக்கும் கொரோனா கால்வைக்காத ஒரே கண்டம் என்ற சாதனையை சத்தம் இல்லாமல் இன்னும் இந்த குளிர்பிரதேசம் தன்வசம் வைத்துள்ளது.


Tags : Antarctica ,continents ,world ,continent ,Corona , Corona, Adventure, Antarctica
× RELATED சென்னை விமானநிலையத்தில் உற்சாக...