×

சேலம்-ஈரோடு ரயில்வே வழித்தடத்தில் 158 ஆண்டு பழமையான பாலத்தை அகற்றி 36 மணி நேரத்தில் புதிய பாலம் அமைப்பு: ரயில்வே துறை சாதனை

சேலம்: சேலம்-ஈரோடு ரயில்வே வழித்தடத்தில் 158 ஆண்டு பழமையான பாலத்தை இடித்து அகற்றிவிட்டு, 36 மணி நேரத்தில் புதிய பாலத்தை ரயில்வே துறை கட்டி சாதனை படைத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் ரயில் இயக்கத்தை ரயில்வே நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. அத்தியாவசிய பொருட்களை மட்டும் சரக்கு ரயில்களில் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வருகின்றனர். ரயில் இயக்கமற்ற ஊரடங்கு காலத்தில், ரயில்வே வழித்தடங்களில் பராமரிப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதிலும், நீண்ட நாட்கள் நிலுவையில் இருக்கும் பழைய தரை பாலங்கள் அகற்றம், புதிய பாலங்கள் ஏற்படுத்துதல், சிக்னல் மாற்றியமைத்தல், வழித்தடங்களில் புதிய திருப்பங்கள் ஏற்படுத்துதல் போன்றவற்றை செய்ய அறிவுறுத்தியது. இதன்பேரில், ஒவ்வொரு ரயில்வே கோட்டத்திலும் பராமரிப்பு பணிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சேலம் ரயில்வே கோட்டத்தில், சேலம்-ஈரோடு வழித்தடத்தில் ஆனங்கூர் ஸ்டேஷனுக்கும், காவேரிபாலம் ஸ்டேஷனுக்கும் இடைப்பட்ட பகுதியில் 158 ஆண்டுகள் பழமையான ரயில்வே தரைப்பாலம் உள்ளது. இந்த பாலத்தை அகற்றி, புதிய பாலம் கட்ட ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. அப்பணியை மேற்கொள்ள முடியாமல் இருந்த நிலையில், தற்போது ஊரடங்கை பயன்படுத்தி அப்பணியை செய்து முடிக்க கோட்ட அதிகாரிகள் திட்டமிட்டனர். அதன்படி, 1862ம் ஆண்டு கட்டப்பட்ட தரைப்பாலத்தை கடந்த 4ம் தேதி இடித்து அகற்றினர். தொடர்ந்து அந்த இடத்தில் புதிய பாலத்தை கட்டும் பணியை பொறியாளர்கள் மேற்கொண்டனர். 4, 5ம் தேதியில் இடைவிடாது பணிகளை செய்து, அந்த இடத்தில் புதிய தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்த பணி, 36 மணி நேரத்தில் முடிவடைந்தது.  இது பற்றி சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறுகையில், ‘‘நீண்டநாள் நிலுவையில் இருந்த ஆனங்கூர்-காவேரி பாலம் இடைப்பட்ட பகுதியில் இருந்த தரைப்பாலம் சீரமைப்பு பணியை 36 மணி நேரத்தில் செய்து முடித்துள்ளோம். 1862ம் ஆண்டில் கட்டப்பட்ட பழமையான அந்த தரைப்பாலத்தை இடித்து அகற்றிவிட்டு, அந்த இடத்தில் புதிதாக தரைப்பாலம் கட்டப்பட்டது. இதற்காக ஏற்கனவே சிமெண்ட் கலவை கொண்டு தயார் செய்து வைத்திருந்த பிரத்யேக சிலாப்களை பொறுத்தி, மிக வேகமாக பணிகளை முடித்து, சாதனை படைத்துள்ளோம். இதேபோல், இதர நிலுவை பணிகளையும் முடிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது,’’  என்றனர்.


Tags : bridge , 158-year-old bridge , Salem-Erode ,railway line removed
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!