×

மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில் கோவில்பட்டியில் ரூ.10 கோடி கடலை மிட்டாய் தயாரிப்பு பாதிப்பு

கோவில்பட்டி: மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில் ஊரடங்கால் கோவில்பட்டியில் ரூ.10 கோடி அளவிற்கு கடலை மிட்டாய் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வினால் தற்போது தொழிலாளர்கள் சமூக விலகலுடன் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தீப்பெட்டி உற்பத்திக்கு அடுத்தபடியாக கடலைமிட்டாய் தயாரிப்பு தொழில் பிரதானமாக திகழ்கிறது. இங்கு  குடிசைதொழிலாக 100க்கும் மேற்பட்ட சிறு நிறுவனங்களும், 50க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்களும் கடலை மிட்டாய் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இங்கு தயாராகும் கடலைமிட்டாய் தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. இந்நிலையில் கொரோனோ காரணமாக மார்ச் 24 முதல் மே 3ம் தேதி வரை 40 நாட்கள் ஊரடங்கு அமலில் இருந்ததால் கோவில்பட்டியில் கடலைமிட்டாய் தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனை கடைகளும் மூடப்பட்டன. இதனால் சுமார் 6 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்ததோடு, ரூ.10 கோடி மதிப்பிலான கடலைமிட்டாய் தயாரிப்பு, விற்பனை பாதிக்கப்பட்டதாக தயாரிப்பாளர்கள் கவலை தெரிவித்தனர்.

கோவில்பட்டியில் தயாரிக்கப்படும் கடலை மிட்டாய்கள் சென்னை போன்ற பெருநகரங்களுக்கும், மகாராஷ்டிரா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, பீகார், டில்லி போன்ற பல்வேறு வெளிமாநிலங்களுக்கு ரயில்களில் அனுப்பப்பட்டது. ஊரடங்கால் ரயில்கள் இயங்காததால் கடலைமிட்டாய் வியாபாரம் பாதித்தது. இந்நிலையில் கடந்த வாரம் கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதனால் கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு ஏற்கனவே இருந்த மதிப்பு, புவிசார் குறியீடு அங்கீகாரத்தால் மேலும் அதிகரிப்பதோடு, கூடுதலான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும், ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். கடந்த 4ம் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சமூக விலகலுடன் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரயில் இயக்கப்படாததால் அனுப்புவதில் சிக்கல்

இதுகுறித்து கோவில்பட்டி கடலைமிட்டாய் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் நலச்சங்க தலைவர் கார்த்தீஸ்வரன் கூறுகையில், மே 4 முதல் வரும் 17ம் தேதி வரையிலான ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதையடுத்து கோவில்பட்டியில் கடந்த சில நாட்களாக கடலை மிட்டாய் தயாரிப்பு நிறுவனங்கள் சமூக விலகலுடன் காலை 10 முதல் மாலை 5 மணி வரை இயங்குகிறது. ஊரடங்கால் கடந்த 40 நாட்களாக தொழில் நிறுத்தப்பட்டதால், ரூ.10 கோடி மதிப்பிலான கடலைமிட்டாய் தயாரிப்பு மற்றும் விற்பனை பாதிக்கப்பட்டது. தற்போது அரசின் வழிமுறைகளை பின்பற்றி கடலைமிட்டாய் தயாரிக்கப்பட்டு வருகிறது. ரயில்கள் இயக்கப்படும்போது வெளிமாநிலங்களுக்கு அரசு அறிவிக்கும் உத்தரவுகளை பின்பற்றி அனுப்பப்படும். மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு இடங்களில் தயாரித்து, கோவில்பட்டி கடலைமிட்டாய் என போலியான லேபிள் ஒட்டி விற்கப்பட்டு வந்தது. புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதால் இனிமேல் அதுபோன்று விற்க முடியாது. இது கடலைமிட்டாய் தயாரிப்பு தொழிலுக்கு புத்துணர்வை அளித்துள்ளது என்றார்.

Tags : government ,Kovilpatti , Kovilpatti's, Rs 10 crore, sea candy product affected
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!