×

மூடிய திறக்கறதுக்குள்ள மூடிட்டாங்களே மாப்ள... 2வது நாளாக டாஸ்மாக்கில் விற்பனை அமோகம்: போதை ஏறி பலர் சாலையோரம் மயங்கினர்

நெல்லை நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் 2வது நாளாக டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை சக்கை போடு போட்டது. மதுபானம் கிடைத்த உற்சாகத்தில் குடிமகன்கள் கும்மாளம் போட்டனர்.கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. எனினும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை ெகாடி கட்டிப் பறந்தது. கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. 43 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் டாஸ்மாக் மதுபானக் கடைகள் நேற்று முன்தினம் (7ம் தேதி) திறக்கப்பட்டன. இதை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முதல் நாளில் மட்டும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 12 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்தது. இந்நிலையில் 2ம் நாளான நேற்றும் மதுக்கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. நெல்லை மாநகரில் ஆதார் எண், வண்ண அடையாள அட்டை கொண்டு வந்தவர்களுக்கு மட்டுமே மதுபானம் என்பதால் ஒரு சில கடைகளில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. எனினும் ஒரு கடையில் சராசரியாக 25 பேர் வரை நின்று மதுபானம் வாங்கிச் சென்றனர். எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படும் தியாகராஜ நகர் ரயில்வே கேட் அருகில் உள்ள மதுபானக் கடையில் காலையில் கூட்டம் குறைவாக இருந்தது.

நெல்லை வண்ணார்பேட்டை அண்ணா சாலை மதுபானக் கடை, முருகன்குறிச்சி எலைட் மதுபானக் கடை, பாளையங்கால்வாய் கரையோரம் அமைந்துள்ள மதுக்கடைகளிலும் மதுபானம் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. ஒவ்வொரு கடையிலும் போலீசார் நின்று வரிசையில் வந்தவர்களை ஒழுங்குபடுத்தினர். பார் இல்லாத நிலையில் குடிமகன்கள் பலர் கையில் தண்ணீர் பாட்டில் சகிதம் வந்திருந்தனர். பலர் ஒதுக்குப்புறமான இடங்களிலும், சிலர் குடியிருப்பு பகுதியிலும் எந்த கவலையுமின் சரக்கை கவிழ்த்து குடித்து விட்டு மதுபாட்டில்களை அங்கேயே வீசி விட்டு நடையைக் கட்டினர். நீண்ட நாட்களுக்கு பின் மது கிடைத்த மகிழ்ச்சியில் பலர் அளவுக்கு மீறி மது குடித்து விட்டு சாலையோரமும், குடியிருப்பு பகுதியிலும் போதையில் மயங்கி விழுந்து கிடந்தனர். சில இடங்களில் போலீசார், உறவினர்கள் அவர்களை எழுப்ப முயன்றும் முடியாமல் அப்படியே விட்டுச் சென்றனர்.நெல்லை மாவட்டத்தில் 90 கடைகளிலும், தென்காசி மாவட்டத்தில் 60 கடைகளிலும் என 150 கடைகளில் நேற்று 2வது நாளாக மதுபானம் விற்பனை அமோகமாக நடந்தது. கொரோனா பாதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு பகுதிகள், சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 145 டாஸ்மாக் கடைகளில் 131 கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. வழக்கமாக மாவட்டத்தில் ஒரு நாளைக்கு சுமார் ரூ.2.20 கோடி அல்லது 2.40 கோடிக்கு மதுவிற்பனை நடக்கும். ஆனால் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் ரூ.5 கோடியே 68 லட்சத்து 40 ஆயிரத்துக்கு மதுவிற்பனை நடந்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும் மதுவகைகள் 7629 பெட்டிகளும், பீர் வகைகள் 1105 பெட்டிகளும் விற்பனையாகி உள்ளது.முக்கிய பகுதிகளில் நேற்று முன்தினம் கூட்டம் அலைமோதிய நிலையில் நேற்று பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்க ஆட்களே வரவில்லை. இதனால் பெரும்பாலான கடைகள் காலியாகவே காணப்பட்டது.

செக்போஸ்டில் நின்ற போலீசார் மதுக்கடைக்கு மாறினர்
கொரோனா ஊரடங்கால் 43 நாட்களாக போலீசார், ஊர் காவல் படையில் நகரின் முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்களை கண்காணித்து வந்தனர். தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் சோதனைச் சாவடியில் வாகன சோதனை செய்த போலீசார் அனைவரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : road , Moodittangale Maple, Open , Closed Openings
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...